- பாஜக
- அன்புமணி
- தேர்தல் ஆணையம்
- ராமதாஸ்
- அய்யா பிஎம்கே
- அஇஅதிமுக
- பா.ம.க.
- ராமதாஸ்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பாமக…
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால், பாமக இரண்டாக உடைந்து உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளது. அவர்களுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 18 தொகுதிகளிலும் அன்புமணி பாமக வேட்பாளர்கள் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராமதாஸ்-சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், அவரும் மாம்ப்ழம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய ஆவணங்களின் படி மாம்பழம் சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நாட்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 23ம் தேதி உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு 13வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ராமதாஸ் மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். ஆனால், ‘‘மூன்று நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில் எப்படி வழக்கை ஒத்திவைப்பது? உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யலாமே?’’ என்று அன்புமணி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, இன்று பதில் மனுத்தாக்கல் செய்தவுடன், அன்றே வாதம் செய்ய தயாராக இருப்பதாக அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய அன்புமணிக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்த விசாரணைக்கு பின் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் அய்யா பாமக என்ற புதிய கட்சியை பதிவு செய்யக்கோரி கடந்த டிசம்பர் மாதம் மனு செய்தது. ஆனால் உடனடியாக பதிவு செய்யவில்லை. இதனால் பாமக நிறுவனர் ராமதாசின் வழக்கறிஞர் அருள் புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் அய்யா பாமக எனும் கட்சிக்கு கொடுக்கப்பட்ட முகவரி தவறாக உள்ளதாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக கட்சியை விரைந்து பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையேற்றுக் கொண்ட நீதிமன்றம் புதிய கட்சியை உடனடியாக பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. 4 மாதங்களுக்கு பிறகு தேர்தல் ஆணையம் அய்யா பாமக என்ற கட்சியை முறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
கூட்டணிக்கு அதிமுக தலைமை என்றாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி, எந்த சின்னத்தில் போட்டி என்று எல்லாம் முடிவுகளும் டெல்லி எடுக்கப்படுகிறது. அதன்படி, கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அந்த கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. தமாகாவுக்கான சைக்கிள் சின்னத்திலும் போட்டியிடாமல், பிரதான கட்சியான அதிமுக சின்னத்தில் போட்டியிடாமல் தாமரையில் வாசன் போட்டியிடுவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதேபோல், டிடிவியின் அமமுக, அன்புமணியின் பாமக, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட டெல்லி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவை விட அதிக வாக்கு வங்கியை வாங்கி அவர்களை அடுத்த தேர்தலில் ஓரம்கட்டவே தாமரை சின்னத்தில் நிற்க வைக்க பாஜ வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரிடம் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைக்க வலியுறுத்தி உள்ளார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். தற்போது, அன்புமணி தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாம்பழம் சின்னத்தை முடக்க டெல்லி மறைமுக வேலையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சின்னத்தை முடக்கி, ராமதாசின் அய்யா பாமக கட்சிக்கு அனுமதி வழங்கினால், அன்புமணி நம்ம வழிக்கு வருவார் என்று பாஜ கணக்கு போடுகிறது. இந்த திட்டத்தின்படி தற்போது அய்யா பாமக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
* தேர்தல் செலவுக்கு ஜிபே, போன்பேல காசு அனுப்புங்க… வீரப்பன் மகள் புது ஐடியா
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மறைந்த சந்தன வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வெத்தலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து ஓட்டு கேட்பது, பெரியவர்களிடம் மண்டியிட்டு ஓட்டு கேட்பது என்று தனது பிரசாரத்தால் கவனம் ஈர்த்து வருகிறார். இது ஒரு புறமிருக்க, தேர்தல் செலவுக்கு பணஉதவி செய்யுமாறு உருக்கத்துடன் அவர் வெளியிட்டுள்ள வேண்டுகோள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற தமிழ் சொந்தங்களுக்கு, வனக்காவலர் வீரப்பனின் மூத்தமகள் வித்யா பேசுகிறேன். வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். தேர்தல் செலவையொட்டி அன்றாட தேவைகளான டீசல், உணவு, வாகனம் ஆகியவற்றுக்கு தேர்தல் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. உலகெங்கும் வாழும் ஒன்பதரை கோடி தமிழ்சொந்தங்களான எனது அக்கா, அண்ணன், பெரியப்பா, சித்தப்பா மற்றும் பெரியோர்கள் சேர்ந்து உங்களால் இயன்ற நிதியுதவி அளித்தால், அதுவே என் வெற்றியை உறுதி செய்யும்,’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் ஜிபே, போன்பே, வங்கி கணக்கு விபரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
