×

அகோரியை அழைத்து வந்து பாஜ தேர்தல் பிரசாரம்: கேரள அமைச்சர் கண்டனம்

திருவனந்தபுரம் நேமம் தொகுதியில் பாஜ சார்பில் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் அமைச்சர் சிவன்குட்டியும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ சபரிநாதனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக இமாலயத்தில் இருந்து வந்த ஒரு அகோரி தேர்தல் பிரசாரம் செய்ததாக புகார் எழுந்தது. தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகரை அகோரி ஆசிர்வாதம் செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சிவன்குட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அகோரிகளை தேர்தல் பிரசாரத்திற்கு கொண்டு வந்தது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாகும். அரசியலில் மதத்தை கலக்கக் கூடாது என்று அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மதரீதியான நிகழ்ச்சிகளில் அகோரிகள் கலந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அரசியலில் தலையிடுவது தான் தவறான நடவடிக்கையாகும். இவர்கள் தங்களது வீடுகளுக்கும் வந்து விடுவார்களோ என்று நேமம் தொகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர். பள்ளி நேரத்தில் அகோரிகள் வெளியே வந்தால் மாணவர்கள் பயந்து விடுவார்கள்’’ என்றார்.

ஆனால் தேர்தல் பிரசாரத்திற்காக அகோரியை பாஜ வரவழைக்கவில்லை என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உத்திரபிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் ஒரு அகோரி திருவனந்தபுரத்திற்கு வந்தார். அவர் செல்லும் வழியில் எங்களது கட்சியின் சார்பில் ஒரு குடும்ப சங்கம் நிகழ்ச்சி நடந்தது. அதைப் பார்த்த அகோரி தானாகவே வந்து எங்களுடைய கூட்டத்தில் கலந்து கொண்டார். அகோரியை தேர்தல் பிரசாரத்திற்காக பாஜ பயன்படுத்தவில்லை. அவர் செல்லும்போது வாகனத்திற்கு டீசல் போட பணம் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு நான் 500 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தேன்’ என்றார்.

* பாக். தொடர்பு குற்றச்சாட்டு: அசாம் முதல்வர் பயந்து விட்டார்; கவுரவ் கோகாய் மனம் திறந்த பேட்டி
அசாம் சட்டப்பேரவை தேர்தல் அனல் பறக்கிறது. வெற்றிகரமாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்து, மனுத்தாக்கலும் முடிந்து விட்டது. இப்போது ஆட்சியை மீண்டும் பா.ஜ தக்கவைக்குமா அல்லது காங்கிரசிடம் பறிகொடுக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மக்களவையில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலுக்கு, அதுவும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகிறார் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய். அவரது மனம் திறந்த பேட்டி: என்னையும், எனது மனைவியையும் பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து பேசி வருகிறார்.

அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவர் சொல்வதற்கும், அவருக்கு எதிராக நான் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அதே சமயம் அவரது குடும்பம், அவரது செல்வம், ஊழல், அவரது மனைவியின் நிறுவனத்திற்கு அரசாங்க இயந்திரம் வழங்கும் பலன்கள் பற்றி நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது எல்லோரும் பார்க்கக்கூடிய ஒன்று. எங்கள் குற்றச்சாட்டு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல்வர் ஹிமந்தா பயந்துவிட்டார். இதற்கு மாறாக என் மீதான முதல்வரின் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. அவர் தனது பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தேசியப் பாதுகாப்பை ஒரு ஆதாரமற்ற கோட்பாடாகப் பரப்புகிறார். தேசியப் பாதுகாப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு முதல்வருக்கு கண்ணியம் இருக்க வேண்டும்.

இந்த தீவிரமான விஷயத்தில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. இத்தகைய குற்றச்சாட்டுகள் முதல்வர் ஹிமந்தாவின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும் அம்பலப்படுத்துகின்றன. அவரது குற்றச்சாட்டு குறித்து பலமுறை நாங்கள் பதில் அளித்து விட்டோம். ஆனால் வரி செலுத்துவோரின் பணம் ஏன் முதல்வர் ஹிமந்தா மனைவியின் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு, அதற்கு அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த அரசை நீங்கள் விமர்சித்தால், நீங்கள் சிறையில் அடைக்கப்படுகிறீர்கள்,துண்டிக்கப்படுகிறீர்கள். இது ஜனநாயக அரசியல் அல்ல, பாசிசம். அசாம் மக்கள் இதைவிட சிறந்த தலைமைக்கு தகுதியானவர்கள். இவ்வாறு கூறினார்.

* காங். மாஜி முதல்வருக்கு கொக்கி போடும் பாஜ
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர், கட்சி அலுவலகம் திடீரென திறந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள், காங். மாநில தலைவர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் வி.பி.ராமலிங்கம், நாராயணசாமியை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் தேஜ கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முன்னாள் முதல்வருக்கே சீட் கொடுக்காமல் அவரின் உழைப்பை புறம்தள்ளும் ஒரு நிர்வாகம் நடக்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இங்கே வந்தால் உங்களுக்கான உரிய மரியாதை கொடுப்போம். நீங்கள் இங்கே வாருங்கள். பெருந்தன்மையோடு அழைக்கிறோம். நீங்கள் பாஜவில் சேர வேண்டும். உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கிறது. எனவே, நாங்கள் பாஜகவில் சேர நாராயணசாமியை அன்போடு அழைக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

* இப்போ… ஓட்டுரிமை பறிப்பு… அடுத்து குடியுரிமை பறிப்பு… எச்சரிக்கிறார் மம்தா
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29ல் தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்வர் மம்தா நேற்று பிரசாரத்தை தொடங்கினார். வடக்கு வங்காள பகுதியில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மைனாகுரியில் அவர் பேசியதாவது:
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி மூலம் மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்காகவே அரசியலமைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம், பாஜ மற்றும் ஒன்றிய அரசு ஆகியவை அரசியலமைப்பைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சிக்கிறார்கள். நள்ளிரவில்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது; அதைக் குறித்து நாம் பெருமை கொள்கிறோம்.

ஆனால் இன்றோ, இவர்கள் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையே மறந்துவிட்டார்கள். இவர்கள் அரசியலமைப்பையோ அல்லது ஜனநாயகத்தையோ பின்பற்றுவதில்லை. இவர்கள் மக்களின் வாக்குரிமையைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் வாக்காளர் சிறப்பு பட்டியலை நள்ளிரவில் வெளியிடுகிறார்கள். இன்று இவர்கள் வாக்குரிமையைப் பறிக்கிறார்கள்; நாளைய தினம் என்ஆர்சி சட்டத்தைக் கொண்டுவந்து மக்களின் குடியுரிமையையும் பறிப்பார்கள். எஸ்ஐஆர் திருத்தப் பணியின் மூலம் ராஜ்வன்ஷி சமூகத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணின் பெயரை நீக்குவது என்பது, ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் பெயரையே நீக்குவதற்குச் சமமாகும்.

எஸ்ஐஆர் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து மேற்கு வங்கத்தில் 220 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அவர்களின் ஆன்மாக்கள் கதறி அழுதுகொண்டிருக்கின்றன. பாஜ நினைவில் கொள்ள வேண்டும்; அவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். நீண்ட காலமாக இங்கு வசிப்பவர்களையே வெளிநாட்டினர் என்று பா.ஜ முத்திரை குத்துகிறது. இம்மண்ணில் இத்தனை காலம் வாழ்ந்த பிறகு, நீங்கள் எங்களை வெளிநாட்டினர் என்று அழைத்து, எங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்கிறீர்கள். முதலில், நீங்களே இந்த நாட்டின் குடிமகனா என்பதை நிரூபியுங்கள்; அதன் பிறகு மக்களைச் சவால் விடுங்கள். அவர்கள் என்னிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டார்கள். இப்போது என்னிடம் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உள்ளது. மக்கள். மக்களை என்னிடம் இருந்து அவர்களால் ஒருபோதும் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : GATHERING AKORI ,KERALA ,President ,Rajiv Chandrasekhar ,Bajaj ,Thiruvananthapuram Namam ,Minister ,Shivankuti ,MLA ,Sabaryanathan ,Congress ,Rajiv Chandrashekar ,
× RELATED 28 தொகுதிகளை அடையாளம் காண...