×

ஒரே கல்லுல மூணு மாங்கா: ஜான் பாண்டியனுக்கு ஏன் ராஜபாளையம்?

நீண்டகால அரசியல் பின்னணியை கொண்டவர் ஜான்பாண்டியன். தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருக்கிறார். கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் தேர்தல் அரசியலில் வலம் வந்தாலும் எம்பி, எம்எல்ஏ என்ற மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை பெறமுடியவில்லை. முன்பொரு காலத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் முகமாக பார்க்கப்பட்ட இவர், இப்போதாவது எம்எல்ஏ ஆகி விடமாட்ேடாமா என்ற ஏக்கத்தில் தேர்தல்களை சந்தித்து வருகிறார். நீண்டகாலமாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். எழும்பூர் தொகுதியில் இருமுறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

முதுகுளத்தூர், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு இந்த தேர்தலில் பாஜ – அதிமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தனித் தொகுதியில் களம் கண்ட அவர், இந்த முறை பொதுத்தொகுதியான ராஜபாளையத்தை வாங்கியுள்ளார். தென்மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தனித்தொகுதி அவரது கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், எதற்காக பொதுத் தொகுதியை வாங்கினார் என்பது தான் இப்போதைய பரபரப்பாக உள்ளது.

ஆனால், இதன் பின்னணி பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் கடந்த 2011ல் எம்எல்ஏவாக இருந்தவர் கோபால்சாமி. நயினார் நாகேந்திரன் மூலம் பாஜவில் இணைந்த இவர், தற்போது மாநில துணைத் தலைவராக உள்ளார். தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் மூலம் உயர் இடத்திற்கு சென்றுள்ளார். தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி கொண்ட கோபால்சாமி, 2026ல் ராஜபாளையத்தில் களம் காண தயார் நிலையில் இருந்தார். தன்னால் கட்சிக்குள் வந்து, தனக்கு இணையான இடமா, மேலும் ஜெயித்து எம்எல்ஏ ஆகி விட்டால் தனக்கே போட்டியாக வந்து விடுவாரோ என நினைத்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி மூலம் நகர்த்திய காய் இப்போது ஜான்பாண்டியனை அங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இதற்காக அவர்கள் கூறும் காரணம், ஜான்பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் விவகாரத்தில் தீவிரமாக உள்ளார். ராஜபாளையம் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். இதற்கான முதல்படியாக பொதுத் தொகுதியான ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். இங்கு வென்றால் இவர் மூலம் பட்டியல் வெளியேற்றத்தை சாத்தியமாக்கலாம் என நினைத்து ஜான்பாண்டியனை இங்கு நிறுத்தியிருக்கிறார்கள். அதாவது, ஜான்பாண்டியன் மூலம் தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவை பாஜ – அதிமுக அணிக்கு திருப்புவது, கோபால்சாமியையும் காலி செய்து போட்டியில் இருந்து அப்புறப்படுத்துவது, சீட் எண்ணிக்கைக்கு டிமாண்ட் வைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு செக் வைப்பது என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் விதமாக நயினார் நாகேந்திரன், எடப்பாடி ஆகியோர் ராஜபாளையத்தில் ஜான்பாண்டியனை இறக்கி விட்டுள்ளனர் என கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.

* பழிவாங்கிய எடப்பாடி காலி செய்த டெல்லி: கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாதமாதிரி நடிக்கும் ‘மல’
அதிமுக கூட்டணியில், கடந்த முறை கோவை தெற்கு தொகுதி மட்டும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுவிட வேண்டும். அதில், அண்ணாமலையை களம் இறக்க வேண்டும் என உள்ளூர் பாஜவினர் தீவிரமாக இருந்தனர். கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்பட்டது. இதற்காக ரகசிய ஆலோசனை கூட்டங்கள் தெருமுனை பிரசாரங்களில் அண்ணாமலை பங்கேற்று வந்தார். ஆனால் தொகுதி பங்கீட்டில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், வானதி சீனிவாசன் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலைக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பாஜ மாநிலத் தலைவராக இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து வந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே பாஜகவால் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். மேலும் சொத்து குவிப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வெளியானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் ரயிலில் கைப்பற்றப்பட்ட விவகாரத்திற்கு அண்ணாமலையே காரணம் என கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே பனிப்போர் வலுத்து வந்தது. இதேபோல குறுகிய காலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சியை, வானதி சீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் ரசிக்கவில்லை.

இருந்தும், சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இந்த 6 தொகுதிகளில் தோல்வியடைந்தால் தனது இமேஜ்க்கு பங்கம் வரும் என்பதாம், தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி அண்ணாமலை விலகினார். இந்நிலையில் வானதி சீனிவாசன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் அணிகள் அண்ணாமலைக்கு எதிராக தொடர் புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வந்தனர். அதேநேரத்தில், பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அவருக்கு எதிராக கோஷ்டிகள் தலைமையிடம் போர்க்கொடி தூக்கின. எடப்பாடியும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என கறாராக கூறிவிட்டாராம்.

ஏற்கனவே அண்ணாமலை அதிமுக தலைவர்களை இழிவாக பேசியது, எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சனம் செய்தது போன்றவை எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த வரை பாஜ உடன் கூட்டணி சேராத எடப்பாடி பழனிசாமி, அவரை மாற்றிய பிறகே கூட்டணி அமைத்தார். தற்போது அண்ணாமலையின் அடாவடியான பேச்சிற்கு பதிலடியாக, அண்ணாமலைக்கு சீட் கிடைக்காத வகையில் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீட்டை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜ மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமை இணைந்து தனக்கு சீட் இல்லை என்று கூறினால், தான் கட்டமைத்து வைத்துள்ள, ‘மாஸ் இமேஜ்க்கு’ சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, தானாகவே தேர்தலில் போட்டியிடாமல் விலகியது போன்ற தோற்றத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

* அமைச்சருடன் மோதும் தமாகா
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவெராவும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யுவராஜாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த மாதங்களாவே தமாகா பொதுச்செயலாளர் யுவராஜா, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது, போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீவிர களப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதுதவிர ஈரோடு கிழக்கு தொகுதியில் யுவராஜா அவரது புகைப்படத்துடன் வீடு, வீடாக மக்களுக்கு நோட்டீஸ் விநியோகமும் செய்தார்.

மேலும், சமூக வலைத்தளத்திலும் தனக்கான ஆதரவை திரட்டி வந்தார். இது அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதியை குறி வைத்து தான் யுவராஜாவும், அவரது ஆதரவாளர்களும் செய்து வந்தனர். ஆனால், அதிமுக தலைமை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பதிலாக ஈரோடு மேற்கு தொகுதியை ஒதுக்கியது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியை குறிவைத்து செய்து வந்த அனைத்து ராஜதந்திரமும் வீணாகி விட்டதே என தனது ஆதரவாளர்களுடன் யுவராஜா புலம்பியதாக கூறப்படுகின்றது. யுவராஜாவின் புலம்பலுக்கு முக்கிய காரணம் ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிட உள்ளார். எனவே, தேர்தல் முடிவுகள் தற்போதே உறுதியாகிவிட்டதாக தமாகா நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

Tags : Kallula Moonu ,John Pandian ,Tamil ,Nadu Makkal Munnetra Kazhagam ,Devendrakula Vellalar… ,
× RELATED 28 தொகுதிகளை அடையாளம் காண...