ஊட்டி: ஊட்டி தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது. இது நீலகிரி மாவட்ட அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில், ஊட்டி சட்டமன்ற தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதை மறு பரிசீலனை செய்து, அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஊட்டியில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு ஜெயலலிதா பேரவை தலைவர் கெரடா ராஜூ தலைமையில், கடநாடு குமார், பெள்ளி, சிவகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
