×

எங்க சமூகத்த புறக்கணிச்ச துரோகி தளவாய் சுந்தரம் 2 தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்குவேன்: அதிக ஓட்டு வாங்கலைன்னா தற்கொலை பண்ணிப்பேன்; அதிமுக மாஜி எம்எல்ஏ மிரட்டல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி மட்டும் அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் கிள்ளியூரில் தாமரை சின்னத்தில் த.மா.காவும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகளில் பாரதிய ஜனதாவும் போட்டியிடுகிறது. 6 தொகுதிகளில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுக பெற்றுள்ள நிலையில், அந்த கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்துக்கு எதிராக, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கொந்தளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இல்லத்தில், நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவால் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டு 2011 ல் முதல் 2016 வரை நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்து உள்ளேன். 2016 ல் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கடந்த அதிமுக ஆட்சியில் என் மீது, பொய் வழக்கு போட வைத்தார். என்ன வழக்கு தெரியுமா? போக்சோ வழக்கு. என்னை அழிக்க நினைத்தார். நான் இந்த வழக்கை சட்டப்படி சந்தித்து வெற்றி பெற்றேன்.

அதன் பின்னர் நான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக போட்டியிட அதிமுகவில் ஆள் இல்ைல. இதனால் அப்போதைய மாவட்ட செயலாளராக இருந்த, அசோகன், தளவாய்சுந்தரம் என்னை அழைப்பதாக கூறினார். நான் வர மாட்டேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.சை சந்திப்போம் என என்னை அழைத்து சென்றனர். நான் தளவாய்சுந்தரத்தை நம்ப மாட்டேன். பெரிய பிராடு. எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை. அதன்பிறகும் கட்சி என்கிற வேகத்துக்காக நான் போனேன். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் என்னை சந்தித்தனர். நான் எனது மகளை நிற்க வைத்தேன். அது மட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவுக்காக ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்து இருக்கிறேன்.

ஆனால் தளவாய்சுந்தரம் கட்சிக்கு துரோகம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் துரோகம் செய்கிறார். முதுகில் குத்தி விட்டார். தளவாய்சுந்தரம் மிகப்பெரிய துரோகி. மாவட்டத்துல ஒரே ஒரு ெதாகுதியை கேட்டு அவருக்காக பெற்றுள்ளார். எங்கள் சமூகத்தினர் ( நாடார்) 72 சதவீதம் இருக்கோம். ஆனால் எங்களை அவர் வேண்டுமென்றே ஓரம் கட்டி வருகிறார். எங்கள் வாக்குகளை மட்டும் பெற்று விட்டு, எங்கள் இனத்துக்கு துரோகம் செய்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம் வேட்பாளராக இப்போது களமிறங்கினால் கண்டிப்பாக அவரை எதிர்த்து நான் சுயேட்சையாக போட்டியிடுவேன். அவரை விட ஒரே ஒரு ஓட்டு அதிகமாக வாங்க வில்லை என்றால் நான் தற்கொலை செய்வேன். நாகர்கோவிலிலும் சுயேட்சையாக நிற்பேன்.

தளவாய்சுந்தரம் இல்லாமல், கன்னியாகுமரியில் ஒரு கிளை செயலாளரை, நிப்பாட்டினால் கண்டிப்பாக நான் ெஜயிக்க வைப்பேன். 6 தொகுதிக்கு செலவழிப்பேன். தளவாய்சுந்தரம் ஜெயிக்க கூடாது. சுயேட்சையாக களமிறங்கி நான் ஜெயிச்சாலும் அதிமுகவுக்கு தான் ஆதரவாக இருப்பேன். வேறு எந்த கட்சிக்கும் நான் போக மாட்டேன். கட்சி மாற மாட்டேன். என்னை அடக்கம் பண்ணினாலும் அதிமுக கரை வேட்டி தான் இருக்கும். இப்போதும் எடப்பாடியை சந்திக்க போனால் அப்பாயின்ட்மென்ட், அது, இது என்பார்கள். கூலிக்காரனாக நிற்க நான் விரும்பல. அதனால நான் போக வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nagarko ,Kanyakumari ,Adamuwa ,Kumari District ,Killiur ,Bharatiya Janata ,Kavuma ,Nagargovil ,Kulachal ,Vlavangodu ,Padmanapapuram ,
× RELATED பனையூர்காரர்களின் மெகா பாலிடிக்ஸ்:...