திருவாரூர் அருகே மது போதையில் தம்பி அடித்து கொலை

திருவாரூர், மார்ச் 25: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தம்பியை அடித்து கொன்ற அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மூத்த மகன் ராஜகுரு (40). கொத்தனார். இதேபோல் இளைய மகன் பாரதிமோகன் (36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.

இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணன் தம்பி இருவரும் வீட்டின் கொல்லைப்புறத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜகுரு தனது தம்பி பாரதிமோகனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  இதனையடுத்து குடும்பத்தினர் பாரதிமோகனை சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாரதிமோகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நன்னிலம் போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிமோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் ராஜகுருவை தேடி வருகின்றனர்.

 

Related Stories: