×

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணியில் இருந்து 29ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும், பரப்புதலுக்கும் பின்வரும் நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

* 1951ம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* அதன்படி தேர்தல் ஆணையத்தின் பொது ஆணைப்படி ஒரு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். அதாவது; ஒரு பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

* ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளில் இருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.

* இந்த விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

* 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)ம் உட்பிரிவின் விதித்துறைகளின் கீழ் மேற்காணும் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 9.4.2026 (வியாழன்) காலை 7 மணியில் இருந்து 29.4.2026 (புதன்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், மேற்காணும் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Election Commission of India ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...