×

கோடைகாலம் தொடக்கம்: உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே பருக வேண்டும்; ஓஆர்எஸ் பெயரிலான பானங்கள் நீர்ச்சத்து இழப்பை தடுக்காது; சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை: கோடைகாலத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே பருக வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை சாதாரண அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மதிய நேரங்களில் வெளியில் செல்வது கடினமாகி உள்ளதால், பொதுமக்கள் நீர்ச்சத்து இழப்பு (டிஹைட்ரேஷன்), சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், “உப்பு சர்க்கரை கரைசல் (Oral Rehydration Solution – ORS)” என்ற பெயரில் விற்கப்படும் பல வர்த்தக பானங்களை நம்பி நீரிழப்பை சரி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்த உண்மையான உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உப்பு சர்க்கரை கரைசல் என்பது வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிக வியர்வை போன்ற காரணங்களால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை விரைவாக சரி செய்யும் மருத்துவ சிகிச்சை முறையாகும்.

உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் (சோடியம், பொட்டாசியம்) அதிக அளவில் இழக்கப்படும் போது, சரியான சிகிச்சை இல்லாவிட்டால் உறுப்பு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், திரவ நிலையில் தயாராக விற்கப்படும் பல வர்த்தக பானங்கள் (பாட்டில், கேன் வடிவில்) உப்பு சர்க்கரை கரைசல் என்ற பெயரில் விற்கப்பட்டாலும், அவை உடலுக்கு வெறும் புத்துணர்ச்சி அல்லது ஆற்றல் அளிக்கும் சாதாரண பானங்களாக மட்டுமே செயல்படுகின்றன. இவற்றில் தாது உப்புகள் மற்றும் குளக்கோஸின் அளவு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த மருத்துவத் தரத்துக்கு ஏற்ப இல்லை. எனவே, இவற்றால் நீர்ச்சத்து இழப்பை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்தி நீரிழப்பை தவிர்க்க முடியும். வர்த்தக ரீதியிலான பானங்கள் புத்துணர்ச்சிக்கு மட்டுமே உதவும். அவை மருத்துவ தரநிலைக்கு உட்பட்டவை அல்ல. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உண்மையான உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ கிடைக்கின்றன. எனவே அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரு லிட்டர் ஓஆர்எஸ் கரைசலில் இருக்க வேண்டிய சரியான அளவுகள்:
சோடியம் குளோரைடு 2.6 கிராம்
குளுக்கோஸ் 13.5 கிராம்
பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம்
டிரைசோடியம் சிட்ரேட் 2.9 கிராம்
மொத்த எடை- 20.5 கிராம் பாக்கெட், இந்த பாக்கெட்டை நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டர் தண்ணீரில் முழுவதுமாக கலந்து, தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

கோடைகாலத்தில் நீரிழப்பை தவிர்க்க
* அடிக்கடி தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.
* காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீரிழப்பு அறிகுறிகள் (வாய் உலர்தல், சிறுநீர் குறைதல், தலைச்சுற்றல்) தென்பட்டால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் குடிக்க வேண்டும்.
* குழந்தைகள், முதியோர், வெளியில் உழைப்போர் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
* உதவிக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags : ORS ,World Health Organization ,Health Department ,Chennai ,Tamil Nadu ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...