×

தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னையில் நடைபெறும் இரு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றிவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த வாக்காளர் டி.பிரபாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்ளும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என்ற பணிகளுடன், தேர்தல் பிரசாரங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பும், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை உறுதி செய்ய ஆதரவாளர்களை மைதானத்திற்குள் களம் இறக்க வாய்ப்புள்ளது. மைதானத்திற்குள் மோதல்களுக்கு வழி ஏற்படலாம்.

எனவே, சென்னையில் நடைபெறும் இரு போட்டிகளை, தேர்தல் முடிந்த பிறகு வேறு தேதிகளில் மாற்றி அமைக்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். இரு போட்டிகளையும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடத்த அனுமதிக்கும்பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் சின்னம், கொடிகளை காட்சிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : IPL ,Chennai ,Madras High Court ,T. Prabhakaran ,Chepauk-Thiruvallikeni ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...