கடையநல்லூர், மார்ச் 25: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 30ம் தேதி நடக்கிறது. 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 7ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 9ம் தேதி வேட்பு மனு விலக்கிக் கொள்வதற்கான கடைசி நாளாகும். அன்றே போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தற்போது தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு ரங்கோலி, மற்றும் கையெழுத்து இயக்கம் மூலம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவில் தென்காசி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள மின்னணு வைப்பறையில் இருந்து கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 364 வாக்குச்சாவடிகளுக்கு தலா 436 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் 473 விவி பேட் இயந்திரமும் கண்டெய்னர் லாரி மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள அறையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நிகழ்வில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், நகர செயலாளர்கள் அப்பாஸ், பீரப்பா, அதிமுக சார்பில் நகர செயலாளர் எம்.கே முருகன், கருப்பையாதாஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
