கள்ளக்குறிச்சி, மார்ச் 25: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்கள் இன்றி எடுத்து செல்கின்ற பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு குழுவினரை அமைத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி அருண்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, அவ்வாகனத்தில் வந்தவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 910 பணம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள எறவார் கிராமத்தை சேர்ந்த பச்சையாபிள்ளை மனைவி வள்ளி (46) என்பதும், பூ வியாபாரம் செய்து வரும் அவர், ஏற்கனவே பூ வாங்கியதற்கான பணத்தை கொடுக்க கள்ளக்குறிச்சி நோக்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அனந்தகிருஷ்ணனிடம் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி அருண்குமார் ஒப்படைத்தார். அப்போது காவலர்கள் பாலமுருகன், சுதர்சனன் ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கள்ளக்குறிச்சி கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
