துரைப்பாக்கம், மார்ச் 25: சென்னையில் ராஜிவ்காந்தி சாலையில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சோழிங்கநல்லூர் நோக்கி அதிவேகத்தில் தாறுமாறாக சென்றது. துரைப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது முன்னால் சென்ற 5க்கும் மேற்பட்ட பைக் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் வந்தவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் 5 பைக்குகளும் சேதமடைந்தது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்றனர். சிறிது தூரத்தில் அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த டிரைவரை அடித்து உதைத்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் துரைபாக்கம் ஜோதி நகரை சேர்ந்த பாஸ்கரன்(47) என்பதும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
