கே.வி.குப்பம்,மார்ச்25: கே.வி.குப்பம் தொகுதியில் பேருந்தில் சென்ற தங்க நகை வியாபாரியிடம் ரூ.14 லட்சம், 17.5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு, வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் பலமனேரிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்தில் இருந்த பலமனேர் பகுதியை சேர்ந்த சீனிவாசலு என்பவர் கட்டுக்கட்டாக பணமும், சில தங்க நகைகளும் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.14 லட்சத்து 28 ஆயிரத்து 330 ரொக்க பணம், 17.5 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பிடிபட்ட பணம் மற்றும் நகை பலமனேரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் என்றும் ஆர்டர் கொடுத்த நகையை வழங்க வந்த போது பிடிபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்க பணம் வருவதால் நகை மற்றும் பணத்தை வேலூர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
