சென்னை, மார்ச் 25: சட்டமன்ற தேர்தலை யொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையொப்பமிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் கையொப்பமிட்டனர். தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் வரம்பில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 16 சட்டமன்ற தொகுதிகள் சென்னை மாவட்டத்தின் கீழ் உள்ளன. இந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னையை பொறுத்தவரைக்கும் வாக்குப்பதிவு என்பது மாநில அளவை பார்க்கும் போது சராசரியை விட குறைவாக தான் இருக்கும். அதை மாற்றுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு பறவை காகம். எனவே, காகத்தை ஒரு சின்னமாக வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான வணிக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் ஆகியவை டிசம்பர் 3வது வாரம் தொடங்கி ஜனவரி 2வது வாரம் வரைக்குமே முதல் கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு இருக்கிறதாக என்று பார்க்கப்பட்டது. இந்த பரிசோதனையில் 2 மற்றும் 3% குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள இயந்திரங்கள் குறைபாடுகள் இல்லாமல் வாக்குப்பதிவிற்கு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் எந்த இயந்திரம் எந்த சட்டமன்றத் தொகுதிக்கு என கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சேமிப்பு அறையிலிருந்து 16 சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு அனுப்பும் பணி இன்று காலை 8 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, அந்த இயந்திரங்கள் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எந்த இயந்திரம் எந்த சட்டமன்றத் தொகுதிக்கு என கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதோ, அதன்படி அவற்றை வரிசைப்படுத்தி 2, 3 நாட்களுக்குள் காவல்துறையின் பாதுகாப்போடு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் 16 பாதுகாப்பு அறைகளுக்கும் அனுப்பப்படும். இந்த அறை தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அடுத்த கணினி குலுக்கல் முறை நடைபெற்ற பின் பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 4,079 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, இந்த 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு சிஆர்பிஎப் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று காலை முதல் மாலை வரை கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள், மத்திய காவல் பிரிவு, கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொழுது, வாக்காளர்கள் எந்த ஒரு பயமும் இல்லாமல் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு சிஆர்பிஎப் காவல்படையினர், 5-6 இடங்களில் தங்கியுள்ளனர். தற்போது பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. காவல்துறையுடன் இணைந்து எந்தெந்த இடங்களில் எவ்வளவு நபர்கள் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம் என்றால் 50% – 60% தான் வாக்குப்பதிவு நடைபெறும் என்ற எதிர்மறை எண்ணங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப் மாற்றும் விதமாக இந்த தேர்தலில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சட்டமன்றத் தேர்தலில் 70% – 80% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும். கண்டிப்பாக சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு 80 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கற்பகம், கட்டா ரவி தேஜா, மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
