திருத்தணி, மார்ச் 25: ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இதனால், வணிக பயன்பாடு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட் புட் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். வணிக பயன்பாடு சிலிண்டர்கள் தட்டப்பாடு ஏற்பட்டுள்ளதால், டீக்கடைகள் நடத்துவது வியாபாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் கூடுதல் விலைக்கு வணிக பயன்பாடு சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் செலவீனத்தை சமாளிக்க ஏதுவாக திருத்தணியில் பெரும்பாலான கடைகளில் 10 முதல் 12 வரை விற்கப்பட்ட டீயின் விலை 15 ரூபாயாக டீக்கடை உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். டீ விலை உயர்வு தொடர்பாக டீக்கடைகள் முன்பு விலை உயர்வு பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தினமும் நான்கு டீ குடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, டீக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ‘காஸ் தட்டுப்பாடு மற்றும் பால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரம் செய்ய ஏதுவாக டீ விலையை உயர்த்தியதாகவும், வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்கவேண்டும்’ என்றார்.
