திருவள்ளூர், மார்ச் 25: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடை சேதமடைந்து காணப்படுவதால், ரயிலில் ஏறுவதற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான ரயில் போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும். தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து 1.7.1856ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் நாள் ஒரு ரயில் ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கும், 2வது ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூருக்கும் இயக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட முதல் நாளில் திருவள்ளூருக்கு ரயில் இயக்கப்பட்டது என்பது வரலாறு. அன்று முதல் இன்று வரை திருவள்ளூர் நகர மக்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தற்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. 11 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 (நான் சபர்பன் கிரேட் 2) என்று ரயில்வே நிர்வாகத்தால் தரம் பிரித்து தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. ரயில்வே கோட்ட ரயில் தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி 3 என்ற நிலையில் இருக்கும்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்எஸ்ஜி 2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் அமைந்துள்ளது.
இந்த, ரயில் நிலையத்தில் காக்களூர், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவாசத்திரம், மப்பேடு போன்ற சிட்கோ தொழில் பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், பல்வேறு கல்லூரிகளுக்கு செல்பவர்களும், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், வியாபார பணிக்காக செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 100 மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், டபுள் டக்கர், கோவை, சப்தகிரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்கின்றன. இந்த, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளது.
இதில் 1, 2வது நடை மேடைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றனர். இதில், 2வது நடைமேடையில் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் தரை தளங்கள் சேதமடைந்துள்ளது. இதனால், பயணிகள் அவசரத்திற்கு ரயிலில் ஏறும்போது, தவறி விழுந்து விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் சரக்குகள், பெட்டி, படுக்கைகளுடன் வரும் பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளுடன் வரும் பயணிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் நடைமேடைகளில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
