பண்ருட்டி, மார்ச் 25: பண்ருட்டியில் இருந்து ராஜஸ்தானுக்கு ஆடு வாங்க சென்றவர்களிடம் நூதனமுறையில் ரூ.10 லட்சம் மோசடி நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர்கள் சோழன்(40), கார்த்திகேயன்(32). கேரளாவை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார்(50), சிகு(46). இவர்கள் 4 பேரும் விற்பனைக்காக ஆடு வாங்க ராஜஸ்தான் சென்றனர். பண்ருட்டியில் இருந்து காரில் சென்ற இவர்கள், கடந்த 15, 16, 17ம் தேதிகளில் அங்கேயே தங்கியிருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் பகுதியில் ரூ.30 லட்சத்திற்கு 300 ஆடு வாங்கியுள்ளனர். இந்த 300 ஆடுகளை எண்ணி லாரியில் ஏற்றி அனுப்பும்போது, பண்ருட்டி வியாபாரிகளை நூதனமான முறையில் ஏமாற்றி, ஆடுகளை லாரியில் ஏற்றுவதற்கு முன் லாரியை எடை போட்டுள்ளனர். லாரியின் எடை 10,450 கிலோ காட்டியது 300 ஆடுகளை லாரியில் ஏற்றுவதற்கு முன் லாரியில் வெளியே தெரியாதது போல் மண்ணை கொட்டி மூடி உள்ளனர்.
ஆடுகளை ஏற்றி எடை வைத்துள்ளனர். அப்போது 300 ஆடுகளுக்கு பதிலாக 250 ஆடுகளை அனுப்பி மண்ணையும் சேர்த்து எடை வைத்து ஏமாற்றி அனுப்பி உள்ளனர். இங்கு வந்த போது இந்த மோசடி பண்ருட்டி வியாபாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. ரூ.10 லட்சம் அளவுக்கு ஏமாந்தது தெரிய வந்தது. இது பற்றி கேட்டபோது லாரி டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் வியாபாரியிடம் கேட்டபோது அவரும் மழுப்பலாக பதில் சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காடாம்புலியூர் வியாபாரிகள் ஆடு ஏற்றி வந்த ராஜஸ்தான் லாரியை சிறை பிடித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
