ரூ.16,000 கோடிக்கு விற்பனையை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்: இன்னும் கூடுதல் தொகையை எதிர்பார்ப்பதாக தகவல்

மும்பை: 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்சிபி அணியை 19ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. ஆரம்பத்தில் தங்களது பெரும்பான்மையான பங்குகளை மட்டும் விற்கத் திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், தற்போது சரியான விலை கிடைத்தால் அணியை முழுமையாக விற்கத் தயாராக உள்ளது.

நிலவரப்படி, மனோஜ் படாலே 65 சதவீத பங்குகளையும், ரெட் பேட் கேபிட்டல் 15 சதவீத பங்குகளையும், லச்லான் முர்டோக் 13 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். முழுமையாக அணியை விற்க இந்த அனைத்து தரப்பினரின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தச் செயல்முறைக்குச் சற்று கூடுதல் நேரம் ஆகலாம். புகழ்பெற்ற ரெய்ன் குரூப் இந்த விற்பனைப் பணிகளைக் கவனித்து வருகிறது. ஆதித்யா பிர்லா குழுமத்துடன் இணைந்து அமெரிக்க தொழிலதிபர் டேவிட் பிளிட்சர், கால் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல் ஆகிய பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் அணியை வாங்கப் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் செயல்படும் ஒரு முதலீட்டு வங்கி மற்றும் தனியார் பங்கு நிறுவனமான கொலம்பியா பசிபிக் கேபிடல் பார்ட்னர்ஸ் (சிபிசிபி) இடமிருந்து வந்த 1.7 பில்லியன் டாலர் (சுமார் 16,000 கோடி ரூபாய்) ஏலத்தை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைவிட அதிக தொகையை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆதித்யா பிர்லா குழுமம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
யை ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் கேட்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆர்சிபி அணிக்கு மார்ச் 31ம் தேதிக்குள் விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ராஜஸ்தான் அணிக்கு அத்தகைய அவசரம் ஏதுமில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான ஒப்புதல் கிடைத்த பின்னரே, வரும் அக்டோபர் மாதத்தில் இந்த உரிமை மாற்றம் முழுமையடையும்.

Related Stories: