நேரடியாக குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்

அரியலூர், பிப்.16: அரியலூர் மாவட்டம், செந்துறை கொல்லாபுரம் கிராமத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் சில மனுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து நேரடியாக பதிலளித்தார். அரியலூர் மாவட்டம் ஆனந்தாவாடி செல்வகுமார் கூறுகையில், அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு 37 வருடங்களுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதாக கையகப்படுத்தி இதுநாள் பணி வழங்காமல் உள்ளனர். இதனால் நிலத்தை கொடுத்துவிட்டு வாழ்வாதாரமின்றி பலர் திண்டாடி வருகின்றனர். எனவே அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெரம்பலூர் சித்ரா அளித்த மனுவில், தான் மாற்றுத்திறனாளி எனவும், இரு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், பிஎஸ்சி, பிஎட் படித்துள்ளதாகவும், வேலையின்றியும், வீடின்றியும் உள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசுப்பணி வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். ஜெயங்கொண்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்திற்காக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், 30 ஆயிரம் மட்டுமே வழங்கி நிலம் கையகப்படுத்தியுள்ளனர்.

இதனால் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டோம் ஏக்கருக்கு பணம் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டும் இதுவரை எங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. திட்டமும் செயல்படவில்லை. எனவே எங்களது நிலத்தை திருப்பித்தர வேண்டும்.

கடந்த 24 ஆண்டுகளாக 8 ஏக்கர் நிலமிருந்தும், பயிர் செய்ய முடியாமலும், கடனுதவி பெற முடியமலும் அகதிகளாக உள்ளோம் என்றார். இது குறித்து பதிலத்த மு.க.ஸ்டாலின் அண்மையில் அரியலூர் வந்த உதயநிதி ஸ்டாலின் இடமும் இந்த கோரிக்கை வந்துள்ளது. வரும் 3 மாதத்தில் திமுக ஆட்சியில் இந்த பிரச்னை தீர்வு காணப்படும் என்றார். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த பெண் கூறுகையில், கணவனை இழந்த விதவையான எனக்கு சத்துணவு வேலை கேட்டு இருமுறை மனு அளித்தும் கிடைக்கவில்லை. வேலை வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்கின்றனர். யாருக்கு வேலை வழங்குகின்றனர் என தெரியவில்லை. கணவனை இழந்த விதவையான என்னால் கணவர் வீட்டில் கூட வசிக்க முடியாமல் எனது அம்மா வீட்டில் வசிக்கிறேன். தினக்கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறேன்.எனக்கு வேலை வேண்டும் என கூறினார். உங்களது மனு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அரியலூர் மலர்விழி கூறுகையில் தனது கணவர் அரசு பேருந்து விபத்தில் உயிரிந்தவர்க்கு இதுவரை நஷ்ட ஈடும் வழங்கல, பணியும் வழங்கல எனக்கு வாழ்வாதாரம் வேண்டும் என தெரிவித்தார். மூன்று மாதங்களில் கழக ஆட்சி அமைந்தவுடன் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: