*கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வேலூர் மாநகரம்
வேலூர் : வேலூர் நகரில் முன்னறிவிப்பின்றி கால்வாய் பணிக்காக ஆரணி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வேலூர் மாநகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வேலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் நடந்தும், பல சாலைகளில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தேங்குவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆரணி சாலை, அண்ணா சாலை சந்திப்பில் ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அங்குள்ள கால்வாய்களில் நிரம்பி தேங்கி நிற்கிறது.
கால்வாய்கள் சிறியதாக இருப்பதால் சிறிய மழைக்கும் மழைநீருடன் சேர்ந்து ஆரணி சாலை கண் மருத்துவமனை தொடங்கி, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் ஆரணி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை ஆழப்படுத்தி உயரமாக கட்டப்பட வேண்டும் என்றும், இவ்வாறு கட்டப்படும் கழிவுநீர் கால்வாயில் வெளியேற்றப்படும் கழிவுநீர் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகில் அண்ணா சாலையை கடந்து செல்லும் பெரிய கால்வாயில் இணைக்கப்பட வேண்டும் என்றும் நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆனால், ஆரணி சாலையும், அண்ணா சாலையும் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல்மிக்க சாலைகளாக இருந்து வருகிறது. குறிப்பாக வேலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணா சாலை, ஆரணி சாலை என இரண்டு சாலைகளின் வழியாகவும் பாகாயத்தை கடந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில், கழிவுநீர் கால்வாயை பெரிதாக்கி அதை பெரிய கால்வாயுடன் இணைக்கும் பணி நேற்று மதியம் திடீரென தொடங்கப்பட்டதுடன், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்த சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
இதனால் திருவண்ணாமலை, ஆரணி மார்க்கங்களில் இருந்து வரும் அனைத்து இருசக்கர, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அப்படியே சங்கரன்பாளையம் வழியாக அண்ணா சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.
அதேபோல் ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் அனைத்து இருசக்கர, இலகுரக மற்றும் கனரக வாகனங்களும் அண்ணா சாலையில் இருந்து தொரப்பாடி, பாகாயம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
இதனால் வேலூரில் புதிய பஸ் நிலையம் தொடங்கி காட்பாடி சாலை, பெங்களூரு சாலை, அண்ணா சாலை, தொரப்பாடி ஆசாத் ரோடு, தொரப்பாடி-பாகாயம் சாலைகளில் நேற்று மதியம் முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பணி நேற்று மதியம் தொடங்கி எப்போது முடியும் என்பது தெரியாமல் திடீரென போக்குவரத்தை மாற்றி அமைத்த அதிகாரிகளின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பள்ளிகளில் தேர்வு நேரம் என்பதால் வெளியூர்களில் இருந்து வேலூர் வரும் மாணவர்களும், உள்ளூரிலேயே தேர்வு எழுத செல்லும் மாணவர்களும் இதனால் கடும் அவதியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும், பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளும் கடும் அவதியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீர்வை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் கிரீன் சர்க்கிளில் நடந்தது
வேலூர் கிரீன் சர்க்கிளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், கிரீன் சர்க்கிள் பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி ஒருபக்கம் நடந்து முடிந்த நிலையில், மறுபக்கம் மேற்கொள்ள வேண்டிய பணி திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இதனால் பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர். இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் செய்திகள் வெளியானதும் மறுநாளே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அப்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா சாலையை கடக்கும் ஆம்புலன்ஸ்கள்
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள், விபத்தில் சிக்குபவர்கள், பிரசவத்துக்கு செல்லும் நிறைமாத கர்ப்பிணிகள் ஆகியோர் வேலூர் பல்நோக்கு மருத்துவமனை, அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, நாராயணி மற்றும் நறுவீ மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்களுக்கான ஒரே வழி வேலூர் அண்ணா சாலை மட்டுமே. இதனால் நாள் ஒன்றுக்கு அண்ணா சாலையை மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்து செல்கின்றன. உயிர்காக்கும் பணிக்காக விரையும் இந்த ஆம்புலன்ஸ்கள் ஆரணி சாலை போக்குவரத்து தடையால் சிக்கலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
