2வது நாளாக அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் வசூலிப்பு

திருவண்ணாமலை, பிப்.16: அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கலைக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற இருந்த செமஸ்டர் அரியர் தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தேர்ச்சி அறிவிப்பு செல்லாது எனவும், மீண்டும் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை தேர்வு கட்டணம் செலுத்த முடியாது என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கடந்த 13ம் தேதி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை பல்கலைக் கழகம் ஏற்கும் வரை போராடுவோம் என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: