தொகுதி பங்கீட்டு பின் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த தேர்தல் போன்று வரும் தேர்தலையும் தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் வருகை தந்து ரூ.3 ஆயிரம் கோடி நிதிஒதுக்கி புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். கூட்டணிக்குள் புதிய கட்சி இணைந்திருக்கிறது.
பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த கட்சி கூட்டணிக்குள் வரும் போது இன்னும் பலமாக இருக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் அந்த கட்சியோடு இணைந்து போட்டியிடுமாறு ஆலோசனை கூறினர். அதன் அடிப்படையில் அந்த கட்சி இந்த கூட்டணிக்குள் இணைந்திருக்கிறது. கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் பிறகு அறிவிக்கப்படும்’’ என்றார்.
* உத்தேச தொகுதி பட்டியல்
என்.ஆர்.காங்கிரஸ், பாஜ போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான உத்தேச பட்டியல் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் தட்டாஞ்சாவடி, மங்கலம், திருபுவனை, வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு மற்றும் ஏனாம் ஆகிய தொகுதிகளில் என்.ஆர் காங்கிரசும், ராஜ்பவன், மண்ணாடிப்பட்டு, மணவெளி, காலாப்பட்டு, ஊசுடு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, திருநாள்ளாறு, நிரவி-திருப்பட்டினம், மாகே ஆகிய தொகுதிகளில் பாஜவும், அதிமுக உப்பளம், முத்தியால்பேட்டை தொகுதிகளிலும், காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சியும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* புதுவையிலும் தவெக தனித்து போட்டி
பாஜவுக்கு நிபந்தனை விதித்த முதல்வர் ரங்கசாமியை மிரட்டி பாஜ கூட்டணிக்கு பணி வைத்ததால், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தவெக தனித்துப்போட்டியிட முடிவு செய்து உள்ளது. புதுவையில் நாளை மறுநாள் (23ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல் அறிவித்துடன் அவர்கள் வரும் 23ம் தேதி வேட்பு மனு தாக்க செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
* போலி மருந்து வழக்கில் கைதான மாஜி ஐஎப்எஸ் ரங்கசாமியை எதிர்த்து போட்டி
புதுச்சேரி முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். பாகூர் தொகுதியில் களமிறங்கும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். இவர் நடத்திய நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் கலந்து கொண்டார். புதுச்சேரியை உலுக்கிய போலி மருந்து விவகாரத்தில் சத்தியமூர்த்தியை புதுச்சேரி சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்தது.
அவர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த மாதம் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை ஆரம்பித்தார். தைலாபுரத்தில் ராமதாஸ், சசிகலா ஆகியோரை சந்தித்து கூட்டணியில் இணந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘மங்கலம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளேன். வரும் திங்கட்கிழமை பாகூர் தொகுதிக்கும் மனுதாக்கல் செய்வேன். முதல்வரை எதிர்த்துதான் போட்டியிடவுள்ளேன். நிச்சயம் வெல்வேன்’’ என்றார்.
* இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு?
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு கிட்டத்திட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கூட்டணியில் உள்ள திமுக-14, காங்கிரஸ்-14, விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா ஒரு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
