திருவனந்தபுரம் அருகே நகை திருட்டு போனதாக நாடகமாடிய ஆட்டோ டிரைவர் கைது

திருவனந்தபுரம், மார்ச் 20: திருவனந்தபுரம் அருகே மனைவிக்கு தெரியாமல் மகளின் தங்கக் கொலுசை திருடியதை மறைப்பதற்காக வீட்டில் இருந்து 7 பவுன் நகை திருட்டு போனதாக நாடகமாடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே வெங்காணூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (38). ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மனோஜும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றதாக அவர் விழிஞ்ஞம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையிலேயே வீட்டில் உள்ள நபர் யாராவது தான் நகை, பணத்தை திருடியிருக்கக் கூடும் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் நகை, பணத்தை திருடியது மனோஜ் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இதில் நகை, பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மனைவிக்குத் தெரியாமல் மகளின் தங்கக் கொலுசை திருடியதை மறைக்கவே தான் நகை திருடு போனதாக நாடகமாடியதாக போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மனோஜை கைது செய்தனர்.

Related Stories: