ஆயத்த ஆடைகளின் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றிய அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ராஜபாளையம், மார்ச் 20: மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நைட்டி, பாவாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே நைட்டி, பாவாடை ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் சாக்குகள், சிப்பு வகைகள், பைப்பிங் நூல் கண்டு உள்ளிட்ட மூலப் பொருட்கள் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இது நைட்டி, பாவாடை உள்ளிட்ட ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நைட்டி, பாவாடைகளுக்கான துணி வகைகள் வடமாநிலங்களில் இருந்து 80 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் மாசு கட்டுப்பாடு காரணமாக பல தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் ஏற்கனவே மீட்டருக்கு மூன்று ரூபாய் வீதம் விலைவாசி உயர்ந்து, நைட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மூலப் பொருட்களின் விலை உயர்வும் சேர்ந்து சிறு குறு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நைட்டி, பாவாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: