கொடைக்கானல் பகுதியில் மலை வாழைக்கு கடும் கிராக்கி: ரூ.25 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல், மார்ச் 20: கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக மலை வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கீழ் மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்படும், மருத்துவகுணம் கொண்ட மலைவாழைக்கு, சந்தைகளில் பெரும் வரவேற்பு உள்ளது. பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெருமாள்மலை, பேத்துப்பாறை, வட கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் மலை வாழை பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக காட்டு யானை, காட்டெருமை, குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால், மலை வாழை விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகவுஞ்சி கிராமத்தில் நடைபெற்ற மலை வாழை சந்தையில், வாழை வரத்து குறைவால் வாழை கடந்த சில வாரங்களாக வாழை ஒன்று ரூ.10 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வருவதாக மலைக்கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மலை வாழையானது, பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கவும், சென்னை உள்ளிட்ட பெரு மாநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மலைவாழை விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வன விலங்குகளால் மலை வாழை உள்ளிட்ட விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை வனத்துறையினர் கவனம் செலுத்தி, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: