மேல்மலையனூர், மார்ச் 20: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இந்நிலையில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவர் அம்மன் சேஷ சயனம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 11 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் வடக்கு வாசல் வழியே மேளதாளங்கள் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது எதிரே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் மீது மலர்களை தூவி கைகளில் தீபம் ஏந்தியும் மனம் உருகி அம்மனை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடியபோது பக்தர்கள் அம்மனை ஊஞ்சலில் தாலாட்டினர். அச்சமயம் எதிரே கூடியிருந்தவர்கள் ஆக்ரோஷமாக நடனமாடியும், கைகளில் தீ சட்டி ஏந்தி சித்தாங்கு வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அம்மன் பாதத்தில் வைத்து மனமுருகி வேண்டினார். மேலும் ஊஞ்சல் உற்சவத்தின்போது ஏற்பட்ட திடீர் மழையின் காரணமாக பக்தர்கள் மழையில் நனைந்தபடியே ஊஞ்சல் உற்சவத்தை கண்டுகளித்தனர். இதில் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
