வடகரையில் விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானை

செங்கோட்டை, மார்ச் 18: செங்கோட்டை அருகேயுள்ள வடகரை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பல நூறு ஏக்கரில் நெல், தென்னை, வாழை போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் யானை புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இரை தேடி ஒற்றை யானை நடமாடி வருகிறது. வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலையில் மேட்டுக்கால் பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள ஒரு ஏக்கர் நெற்பயிர்களை காலால் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியுள்ளது.

3 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் கூச்சலிட்டு யானையை விரட்டினர். ஆனால் அந்த யானை வனத்துக்குள் போக மறுத்து மீண்டும் அதே பகுதியில் சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேட்டுக்கால் பகுதியில் மன வளர்ச்சி குன்றியோருக்கான அன்பு இல்லம் ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அடிப்படை தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். யானைகள் தாக்கும் அபாயம் இருப்பதால் ஆசிரம நிர்வாகிகள் கதவுகளை பூட்டி வைத்துள்ளனர். முகாமிட்டுள்ள யானையை விரட்டுவதற்கு வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

Related Stories: