கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், மார்ச் 18: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்பு மையம், சிவிஜில் உள்ளிட்ட மையங்கள் நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பட்டு வருகிறது.

இக்கட்டுப்பாட்டு அறை 24X7 அடிப்படையில் செயல்பட்டு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள், சிவிஜில் செயலி புகார்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிவிஜில் புகார் கண்காணிப்பு பிரிவில் செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஊடகக் கண்காணிப்பு பிரிவில் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள், அனுமதியற்ற விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளான தொலைபேசி மூலம் வரும் புகார்களை பதிவேடுகளில் உடனடியாக பதிவு செய்து, உரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும், நடைபெற தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்), கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, தேர்தல் நடத்தை விதிமீறல் கண்காணிப்பு அலுவலர் மற்றும் இணை இயக்குநர் வேளாண்மை வாணி, ஊடகக் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கண்காணிப்பு அலுவலர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண்ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, தேர்தல் தனி தாசில்தார் வினோத், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: