ஓசூர், மார்ச் 17: ஓசூர் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில் ரூ.44.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜீமங்கலம் சந்திப்பு பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், கர்நாடக மாநிலம் மாலூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) உரிய ஆவணங்களின்றி ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஓசூர் குடிசாதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவரிடமிருந்து அந்த பணத்தை கடனாக வாங்கிச் செல்வதாக மஞ்சுநாத் தெரிவித்தார்.
இதேபோல், ஓசூர் அருகே திருச்சிப்பள்ளி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஓசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்(35) என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.57 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் செலுத்துவதற்காக பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44.7 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சப்கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
