140 ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி 4 மீனவ கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய காட்டுப்பள்ளி குப்பம் உள்ளிட்ட 4 கிராம மக்கள்  காட்டுப்பள்ளி எல்அண்ட் டி கம்பெனி முன்பு 140 பேர்களை நிரந்தரம் செய்யக்கோரி கிராம பொதுமக்கள் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஊராட்சியில் எல் அண்ட் டி நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 2008ம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு 140 பேர்களை ஒப்பந்த அடிப்படையாக பணியில் சேர்ந்தனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை பணிநிரந்தரம் செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் செயல்முறை உத்தரவு அளித்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.  அதனால் நேற்று காலை காட்டுப்பள்ளி குப்பம் உள்ளிட்ட மீனவ மக்கள் கைக்குழந்தையுடன்  எல் அண்ட் டி நிறுவனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறியல் தகவலறிந்த பொன்னேரி ஆர்டிஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன், காட்டுப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் வக்கில் சேதுராமன் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கடலி, துணைத்தலைவர் வினோதினி வினோத் மற்றும் காட்டுப்பள்ளி உப்பும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரியும் எங்களை நிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் பொன்னேரி எம்எல்ஏ அனைவருக்கும் பலமுறை கோரிக்கை மனு மறியல் ஆர்ப்பாட்டம் நடத்திய இதுநாள்வரை பணிநிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தும் பொன்னேரியில் தொகுதி அதிமுக எம்எல்ஏ இருந்தும் எங்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை என்று ஆத்திரத்துடன் கூறினர். மாவட்ட கலெக்டரிடம் கைபேசியில் தொடர்பு கொண்ட ஆர்டிஓ.செல்வம்  வருகிற திங்கட்கிழமை பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து பொன்னேரிஆர்டிஓ அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும். காட்டுப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் உள்பட காட்டுப்பள்ளி குப்பம் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவேண்டும். என்று கூறியதை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. கைக்குழந்தையுடன் மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: