புதுச்சேரி, மார்ச் 14: தேஜ கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது தனக்கு தெரியாது. தவெகவுடன் என்ஆர் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தினால், அதனை கூறுவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் முதல்வர் ரங்கசாமி மழுப்பலாக கூறினார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சந்திரபிரியங்கா, தட்சணாமூர்த்தி (எ) பாஸ்கர் மற்றும் பொதுச்செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதுச்சேரி அரசியல் நிலவரம், அடுத்தகட்ட நடவடிக்கை, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் நேற்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குபின் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், முதல்வர் ரங்கசாமி அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது?
பதில்: என்ஆர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது.
கேள்வி: சென்னை பயணம் குறித்து வேறு விதமான விமர்சனங்கள் வருகிறதே?
பதில்: சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு சென்றேன். அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது அண்ணனையும் பார்த்துவிட்டு வந்தேன்.
கேள்வி: விஜயின் தவெகவுடன் என்ஆர் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வருகிறதே?
பதில்: நான் விஜயை பார்த்தே எவ்வளவோ நாட்கள் ஆகிறது. அப்படி பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களிடம் கூறுகிறேன்.
கேள்வி: பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறீர்களா?
பதில்: புதுவையில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது எங்கள் கட்சி தொடர்பாகவே ஆலோசனை மேற்கொண்டோம்.
கேள்வி: பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பேசினீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?
பதில்: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. வதந்தியால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. எரிவாயு தொடர்பாக மத்திய அரசு கூறியுள்ள அறிவுறுத்தலை புதுச்சேரியில் கடைபிடிக்கிறோம். வணிக சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக எந்த குற்றச்சாட்டும் என்னிடம் வரவில்லை.
கேள்வி: தேஜ கூட்டணியில் விஜய் வர வாய்ப்புள்ளதா?
பதில்: அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
கேள்வி: மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா?
பதில்: மாநில அந்தஸ்து எங்களது மிக முக்கியமான கோரிக்கை. அதனை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக தேர்தலை புறக்கணிப்போமா? என்பதை தேர்தல் சமயத்தில் கூறுகிறோம்.
கேள்வி: எல்ஜேகேவுக்கு 2 இடங்கள் ஒதுக்கக் கூடாது. அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியே வர வேண்டும். அதுவரை கூட்டணி பங்கீடு தொடர்பாக பேச மாட்டாம் என்று என்ஆர் காங்கிரஸ் கோரிக்கை வைத்ததாக
கூறுகிறார்களே?
பதில்: அதுமாதிரி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், கூட்டத்தில் அனைத்தையும் ஆலோசித்து பேசியுள்ளோம்.
கேள்வி: எல்ஜேகே கூட்டணிக்கு வர பாஜக விரும்புகிறது. அதேபோல், என்ஆர் காங்கிரஸ் விரும்புகிறதா?
பதில்: தேவை வரும்போது, அனைத்தும் பேசப்படும்.
கேள்வி: புதுவைக்கு வரவுள்ள ஒன்றிய அமைச்சர் மன்சுக்கு மாண்டவியாவை சந்தித்து பேசுவீர்களா?
பதில்: கண்டிப்பாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு உதவித்தொகை? முதல்வர் பதில்
சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு மகளிர் உதவி தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தொகை இரண்டு மாதத்துக்கு சேர்த்து ரூ.5 ஆயிரமாக கடந்த 10 ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் மஞ்சள் கார்டு உள்ளவர்களுக்கு இதுவரை ஆயிரம் மகளிர் உதவித்தொகை வழங்காததது பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் மஞ்சள் அட்டை உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை எப்போது கொடுப்பீர்கள்? என கேட்டபோதுஇதுதொடர்பான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
