பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஜம்மணஅள்ளி கூட்டுரோடு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஜம்மணஅள்ளி கூட்ரோடு பகுதி பகல்- இரவு என எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில் தர்மபுரியில் இருந்து அரூர் செல்லும் சாலையும், பொம்மிடியில் இருந்து அரூர் செல்லும் சாலையும் இணைகிறது. இதனால், கல்லியூர் மற்றும் பட்டவர்த்தி, ஜம்மணஅள்ளி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கரும்பாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக இந்த இடத்துக்கு வந்து செல்கிறார்கள். மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கான இடம் இல்லாததால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, பயணிகளின் நலன் கருதி அப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: