கடன் தொகை செலுத்தாததால் வீட்டுக்கு சீல் நிதி நிறுவனத்தை கண்டித்து மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

விழுப்புரம், மார்ச் 10: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்க சென்ற எஸ்.பி. சாய்பிரனித் முன்பு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தங்களது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரும், எஸ்.பி. சாய்பிரனித்தும் விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே பாவந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (57), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (47), மகன் பால்ராஜ் (27) என்பது தெரியவந்தது.

இது குறித்து தண்டபாணி கூறுகையில், நான் கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளி. கிராமத்தில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததில், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில், எங்கள் வீட்டுமனை பத்திரத்தை வைத்து, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், வீட்டு அடமான கடனாக ரூ.5.70 லட்சம் கடன் வாங்கினோம். இதற்காக தொடர்ந்து மாத தவணையாக ரூ.11 ஆயிரம் வீதம், 41 மாதங்கள் கடனை திருப்பி செலுத்தி வந்தோம். இதன்படி ரூ.4.51 லட்சம் செலுத்தினோம். இடையே, நான் விபத்தில் சிக்கியதால், ஓராண்டு காலம் வருமானமின்றி போனது.

இதனால், தவணை தொகை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், திடீரென வந்த தனியார் நிதி நிறுவனத்தினர், தவணை வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவகாசம் கேட்டும் வழங்காமல், கடந்த பிப்ரவரி 27ம் தேதி வந்த நிதி நிறுவனத்தினர், கடன் தொகை நடவடிக்கைக்காக, எங்கள் வீட்டை பூட்டி சீல் வைத்துவிட்டனர். இதுகுறித்து நாங்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கையில்லை. இதனால், நாங்கள் விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினர். இதையடுத்து அவர்களை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: