ஆட்டு கால்களை வீட்டில் குவித்து வாட்டுவதால் துர்நாற்றம்

தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஹேமமாலினி (54). இவர் நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தெருவின் நுழைவாயில் உள்ள ஒரு வீட்டில், தினசரி ஆட்டின் கால்கள் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து, காலில் உள்ள முடிகளை தீயில் கருக வைத்து, அசைவ ஓட்டல், பாஸ்ட்புட் கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். தினமும் காலை முதல் மாலை வரை, இந்த பணியை மேற்கொள்கின்றனர். இதனால் எழும் புகையால் கடும் நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், தலைவலி ஏற்படுகிறது. உறவினர்கள் வந்தால் ஒருநாள் கூட, எங்களுடன் தங்க முடியாதபடி துர்வாடை வீசுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் மாசுகட்டுப்பாடு வாரியம், சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: