காஞ்சிபுரம், பிப்.26: காஞ்சிபுரத்தில் துணிக்கடை நடத்த அனுமதி கோரியவரிடம் லஞ்சம் கேட்ட வழக்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் காந்தி சாலையில் சக்தி கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்துவதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தடையின்மை சான்று பெறுவதற்காக காஞ்சிபுரம் தீயணைப்பு கோட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த அதிகாரி சுப்பிரமணி என்பவரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட சுப்பிரமணி, காந்தி சாலையில் உள்ள சக்தி கார்மெண்ட்ஸ்க்கு சென்று பார்வையிட்டு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். செல்வராஜ் ரூ.5 ஆயிரம் கொடுக்க சிரமமாக இருக்கும் என்று கூறிய நிலையில் ரூ.3 ஆயிரமாவது கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
இதில், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத செல்வராஜ் இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரர் செல்வராஜிடம் கொடுத்து, தீயணைப்பு துறை அதிகாரி சுப்பிரமணியிடம் கொடுக்குமாறு கூறினர். அதனை மறைந்திருந்து கண்காணித்த போலீசார், சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து, சுப்பிரமணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபனம் ஆனதால், நீதிபதி தீப்தி அறிவுநிதி, குற்றவாளி சுப்பிரமணிக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து, இதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
