திருச்சியில் இன்று திமுக பிரமாண்ட மாநில மாநாடு: 10 லட்சம் பேர் பங்கேற்பு

 

திருச்சி: திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று நடக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

திருச்சி சிறுகனூரில் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’’ என்கிற தலைப்பில் திமுக மாநில மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9ம்தேதி) நடக்கிறது. இதற்காக பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 40,000 முதல் 50,000 பேருந்துகளை நிறுத்தும் வகையில் விரிவான வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன எல்இடி திரைகளுடன் கூடிய பிரமாண்ட மேடை அமைப்பு, 110 அடி உயர கொடிக்கம்பம், 10 லட்சம் பேருக்கு அறுசுவையான சைவ மற்றும் அசை உணவு ஏற்பாடுகள், அமர்வதற்கு போதிய இருக்கைகள், குடிநீர் வசதிகள் என நாடே திரும்பி பார்க்கும் வகையில் மிக மிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு திமுக நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செய்தியுடன் கூடிய அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிகம்பத்தில் மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை கி.மீ நீள ரேம்பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வரும் முதல்வர், தொண்டர்களின் வரவேற்பை பெற்று கொண்டு மாநாட்டு மேடைக்கு செல்கிறார்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ேக.என்.நேரு, அன்பில்மகேஷ், எம்பி சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: