×

எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு: கோவை அருகே பரபரப்பு

சூலூர்: கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் தேனியை சேர்ந்த மாணவர் தினேஷ் குமாரிடம் வழிப்பறி செய்து அவரை கத்தியால் குத்திவிட்டு 3 பேரும் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிச்செல்ல முயன்றனர். ஊழியர்கள் துரத்தி சென்று கௌதம் என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் அவரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய 2 பேரை தேனி, திருப்பூர் மாவட்ட போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுக்கரை பகுதியில் ஒரு வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு மற்றும் வழிப்பறி நடந்துள்ளது. இந்நிலையில் சூலூர் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வெளி மாவட்ட நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சூலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அங்கிருந்து தப்பியோட முயன்றவர்களை போலீசார் விரட்டி பிடித்த போது பாலமுருகன் என்பவர் எஸ்ஐ யுவராஜை அரிவாளால் இடது பக்க தோளில் வெட்டியுள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் துப்பாக்கியால் பாலமுருகனை வலது காலில் சுட்டு பிடித்துள்ளார். அவருடன் இருந்த ஆனந்த் என்பவரும் தப்பி ஓடும்போது கையில் முறிவு ஏற்பட்டது. பின்னர் எஸ்ஐ உட்பட 3 ேபரையும் சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் எஸ்ஐ யுவராஜுக்கு இடது தோள் பட்டையில் 10-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளது.

தகவலறிந்து எஸ்பி கார்த்திகேயன் மருத்துவமனைக்கு வந்து எஸ்ஐ யுவராஜை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் கொள்ளையர்கள் பாலமுருகன், ஆனந்த், நவீன்குமார், முகேஷ் மற்றும் விஷால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒருவர் மட்டும் கல்லூரி மாணவர். அவர் சிவகங்கையை சேர்ந்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்’’ என தெரிவித்தார்.

Tags : SI ,Goa ,Suleore ,Teni ,Dinesh Kumar ,Khamanayakanpalayam ,Tiruppur district ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!