×

சீட்டுக்காக டெல்லியில் தெருத் தெருவாக அலையும் இபிஎஸ்: புதிய கட்சி தொடங்கிய புகழேந்தி கலாய்

புரட்சி அண்ணா திமுக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள புகழேந்தி, நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு பிணை பெற்று கொடுத்த என் மீது எடப்பாடி பழனிச்சாமி, தேச துரோக வழக்கு போட வைத்தார். எடப்பாடி பழனிசாமியை, அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் வரை, நான் ஓயமாட்டேன். எடப்பாடியை நானே பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் போட்டி. துரோகம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் விடமாட்டோம். மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து, என்னை ஆதரித்தால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்று வெற்றி பெற தயார். தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அப்படியும் போட்டியிடுவேன்.

பாஜவை எதிர்க்கும் அதிமுக தொண்டர்களை, புரட்சி அண்ணா திமுக வரவேற்கும். இது மதச்சார்புள்ள கட்சிகளுக்கு, எதிரான கட்சியாக விளங்கும். ஜெயலலிதா கூட்டணிக்காக டெல்லிக்கு சென்றது இல்லை. இங்கிருந்தே அரசியல் செய்தார். அதேபோல் தான், இப்போது திமுகவும், இங்கிருந்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்காக டெல்லியில் தெருத் தெருவாக அலைகிறார். தொகுதி பங்கீடுக்காக, டெல்லியில் தெருத் தெருவாக அலைகிறார்.

நான் தான் அதிமுக. என் தலைமையில் தான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று பாஜவை கூப்பிட, பழனிச்சாமிக்கு யோக்கியதை உண்டா? அந்த நிலை மாற்றப்பட வேண்டும். மதச்சார்புடன், கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி இந்த மண்ணில் கால் வைக்க நினைப்பவர்களை எதிர்க்கின்ற கட்சியாக எங்கள் கட்சி விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : EPS ,Delhi ,Pugazhendi Kalai ,Pugazhendi ,Puratchi ,Anna ,DMK ,Chennai ,Edappadi Palaniswami ,Jayalalithaa.… ,
× RELATED எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன்...