×

அதிமுகவில் சீட் கிடைக்காது ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன் திடீர் அழைப்பு

ஈரோடு மாவட்டம், கோபியில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்களை சந்திக்க திராணி இல்லாதவர் விஜய் என்றும், கூட்டணி வைக்க யாரும் விரும்பாததால் அதிமுக பக்கம் தற்போது விஜய் பார்வை திரும்பி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்காரே? என்ற கேள்விக்கு, ‘‘ஜெயக்குமார் வேண்டுமானால் எங்கள் அணிக்கு வரலாம்.

அவருக்கு அதிமுகவில் சீட்டு கிடைக்கப் போவதில்லை. அவரது மகனுக்கு மட்டும்தான் சீட்டு கிடைக்கும் என்ற ஆதங்கத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார். அவருடைய கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜெயக்குமார் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘அவர் எனது நண்பர், முதலில் வருவதாக சொல்லட்டும், அதன்பிறகு அதைப்பற்றி பேசலாம், வருவாரா அல்லது ஏற்றுக்கொள்வீர்களா என்பதற்கு பதில் சொல்ல முடியாது. அதைப்பற்றி தலைவரிடம் சொல்வோம்’’ என்றார். உங்கள் நண்பர் புகழேந்தி, புதிய கட்சி தொடங்கி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அவர் எனது நண்பர் மட்டுமல்ல, அவர் பலருடைய நண்பர்’’ என்றார்.

* கூட்டணியே இன்னும் முடிவாகல… இதுல வேட்பாளர் பட்டியலா?
சென்னை விமான நிலையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா, புகழேந்தி புதிய கட்சிகளை தொடங்கியுள்ளது, அவரவர் விருப்பம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகிவிட்டதா என்று எங்களிடம் எதற்காக கேட்கிறீர்கள்.

தவெகவில் இன்னும் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்பதை, பொறுத்திருந்து பாருங்கள். தனித்தா அல்லது வலிமையான கூட்டணியா? என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar ,Thaveka ,AIADMK ,Sengottaiyan ,Executive ,Committee ,Chief Coordinator ,Gopi, Erode district ,Vijay ,
× RELATED எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன்...