- முதல் அமைச்சர்
- நிதிஷ்
- எடப்பாடி
- மணிக்கம் தாகூர்
- விருதுநகர்
- பீகார்
- நிதீஷ் குமார்
- ராஜ்ய சபா
- பாஜக
- எடப்பாடி பழனிசாமி
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை, பாஜ வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி இருக்கிறார்கள். இதே போன்ற நிலைமை தனக்கு வரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி பயத்தில் இருக்கிறார். கூட்டணி கட்சியினரை மோடி மற்றும் அமித்ஷா எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு நிதிஷ் குமார் ஒரு உதாரணம்.
ஒரு மாநிலத்தின் முதல்வரை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக மாற்றி இருப்பதன் மூலம், பீகாரை பாஜ முழுமையாக தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. இதுபோன்ற நிலைமை தமிழ்நாட்டுக்கு பாஜவால் ஏற்படக்கூடாது. எடப்பாடி பழனிசாமி, தினகரன், அன்புமணி போன்றவர்கள் வரலாற்று பிழையை செய்ததால், தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
மோடி, அமித் ஷா நடத்தும் கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே. அதனால் தான் எடப்பாடி போன்ற தலைவர்கள் அடுத்த நிறுத்தம் என்னவாக இருக்கும் என்று சிறிது பதட்டமாக இருக்கலாம். நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பாஜ தமிழகத்தில் காலூன்ற கூடாது என வலியுறுத்துகிறோம். எடப்பாடிக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம்.
இதே நிலைமை தொடர்ந்தால் நிதிஷ்குமார் போல் 2028ல் எடப்பாடியும் ராஜ்யசபா எம்பியாகி விடுவார். தற்போது உள்ள நான்கு பாஜ சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லாத சட்டமன்றமாக அடுத்து வரக்கூடிய சட்டமன்றம் அமைய வேண்டும். பாஜவை பொறுத்தவரையில் சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களது வேலைக்காரர்களாக மாறிவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக பதவி வகித்த நிதிஷ்குமாருக்கு இந்த நிலைமை என்றால், இந்த மாதிரியான கொடுமைகள் இந்தியாவில் இதுவரை நடந்தது இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
