1. பாமக கட்சி சின்னம் தற்போது யாரிடம் உள்ளது? டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு உள்ளதா? சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்? தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் 4.12.2025 தீர்ப்பின் படியும், அதற்குப் பிற்கு 9.2.2026ல் வந்த மறுஆய்வு உத்தரவு படியும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தலைவராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அன்புமணி தரப்புக்கு தலைவர் என்ற பொறுப்பு அங்கீகரிக்கப்பட முடியாது என்று தேர்தல் ஆணையத்தால் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது.
இரு தரப்பிலும் உரிமை கோருபவர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகி யார் தலைவர் என்று உறுதி செய்து கொள்ளலாம். தலைவர் என்பதை உறுதி செய்யும் பட்சத்தில், தலைவர் யார் வருகிறாரோ அவருக்கு சின்னம் கிடைக்கும். ஆனால் இரு தரப்பும் உரிமை கோருவதால், இந்த தேர்தலிலே போட்டியிட முற்படும்போது பிரச்னைகளை நீதிமன்றம் வாயிலாக தீர்க்காமல் இருந்தால், மாம்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் அன்புமணி தலைவர் அல்ல, மாம்பழச் சின்னம் அவருக்குரியதும் அல்ல.
வழக்கை திரும்பப் பெற்றது என்பது, உயர் நீதிமன்றத்திலே மாம்பழச் சின்னம் விலாசம் மாறி சென்றதை ராமதாசுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதே பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, சட்டப்படி இல்லாத ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும்.
ராமதாஸ்தான் தலைவர் என்றும், வழக்கின் முடியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்ததால், உயர் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்று சிவில் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்கிறோம் என ராமதாஸ் சொல்லியுள்ளார். எனவே பாமக விதி 13ன் படி ராமதாசிடம் நிறுவனம் என்ற முறையில் அதிகாரம் இருக்கிறது. மாம்பழச் சின்னம் இருவருக்குமே கிடைக்காது, அது முடக்கப்படும்.
2. அன்புமணிக்கு எதிரான சிபிஐ வழக்கை ஒன்றிய அரசு விரைந்து விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடரப்படுமா? அன்புமணி மத்திய கேபினட் அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேட்டில் இரு மருத்துவக் கல்லூரிகளுக்கான ஊழல் வழக்கில் அவர் மீது சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4.12.2025ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ அருள் மற்றும் கட்சியினர் சிபிஐயிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.
அன்புமணி தேர்தல் ஆணையத்தில் ஊழல் செய்து, சட்டவிரோதமாக 31.8.2025-ல் பொதுக்குழுவே கூட்டாத போது நடந்ததாகத் தகப்பனார் கையெழுத்தைப் போட்டு ஆவணங்களை உருவாக்கி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ராமதாஸ் கண்டிப்பாக வழக்கு தொடருவார்.
3. வரும் தேர்தலில் வேட்பாளர்களுக்கான ஏ-பார்ம், பி-பார்மில் யார் கையெழுத்திடுவார்கள்? பாமக சட்ட விதிகள் என்ன சொல்கிறது? பாமக சட்ட விதி 35-ன் படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2025ல் நடந்த பொதுக்குழு வாயிலாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏ-பார்ம், பி-பார்ம் கொடுப்பதற்கு பொதுச்செயலாளருக்கு இருந்த உரிமையை மாற்றி, இனி ராமதாஸ் தான் முழுக்கவும் தேர்தல் கூட்டணியைப் பேசுவார்,
வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார், கையெழுத்திடுவார் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே 11.9.2025ல் நீக்கப்பட்டு விட்டார். உறுப்பினர் அல்லாத ஒருவர் தலைவராக முடியாது, மாம்பழம் கேட்க இயலாது. எனவே ஏ-பார்ம், பி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற நபராக ராமதாஸ் இருக்கிறார்.
4. வழக்கைச் சுட்டிக்காட்டி கட்சி மற்றும் சின்னத்தை முடக்க பாஜ முயல்கிறதா? தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர ராமதாசுக்கு அழுத்தம் தரப்படுகிறதா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு சட்ட முகாந்திரம் இல்லாமல் திடீரென கூட்டணி அமைத்துக் கொண்டது சட்டவிரோதம் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். நடுவண் அரசு யாரோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
கடந்த ஓராண்டாக இந்த வழக்கைப் பார்த்து வருகிறேன். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசியுள்ளேன். ஆனால் இதுவரை பாமக பிரச்னையில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை. 5.2.2026ல் நாங்கள் கொடுத்த சட்டப்படியான மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது, தேர்தல் ஆணையம் பாஜவின் கைப்பாவையாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
