×

பலரும் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு மாநிலங்களவை வாய்ப்பு கிடைத்தது எப்படி? பரபரப்பு பின்னணி தகவல்

சென்னை: பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு மாநிலங்களவை வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை பதவிக்கு திமுக சார்பில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்திற்கு யாரை வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, போதிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருக்கும் மீனவர் மற்றும் கிறிஸ்தவர் சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் போட்ட கண்டிசன் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வில் சமூகநீதி முக்கிய அளவுகோலாக கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களிலும் சிறுபான்மையினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது. அதே அணுகு முறையையே பேராசிரியர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தேர்விலும் பின்பற்றியுள்ளது திமுக. மீனவர் மற்றும் கிறிஸ்தவர் சமுதாய மக்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் வகையில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுபான்மையினர் நலனிலும் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திவதிலும் அக்கறைக் காட்டிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிறப்பான முடிவை எடுத்துள்ளார் என அறிவாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி கிராமத்தில் 1967ம் ஆண்டு பிறந்தவர். தந்தை மற்றும் தாய் இருவரும் ஆசிரியர்கள்.

பொறியியல் (எம்பி), கணினிப் பயன்பாட்டியல் (எம்சிஏ), மேலாண்மை (எம்பிஏ), சட்டம் (எம்எல்) மற்றும் முனைவர் பட்டம் (பிஎச்டி) என ஐந்து வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், 20 ஆண்டுகால பேராசிரிய பணியின் மூலம் கல்வியாளராக இருந்தவர். திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக, தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் கட்சியின் கொள்கைகளை பொறுமையுடன் முன் வைப்பவர் என அவருடைய பல பிளஸ்கள் அவரது தேர்வுக்கு காரணமாகியிருக்கின்றன.

இவர் மாநிலங்களவைக்கு செல்வதன் மூலம் குரலற்று இருக்கும் மீனவர்களின் பிரச்னைகளை அழுத்தமாக பதிவு செய்வார் என்று திமுக உறுதியாக நம்புகிறது. அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. அவர்களின் குரலாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஒலிப்பார் என கருதப்படுகிறது.

Tags : Constantine Ravindran ,Rajya Sabha ,Chennai ,DMK ,Trichy Siva ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!