×

ஈரோடு தமிழன்பன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கினார்

சென்னை: ஈரோடு தமிழன்பன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கனவு இல்ல திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கனவு இல்ல திட்டத்தின் கீழ், தாயம்மாள் அறவாணன், பொன்னீலன் (எ) பக்தவத்சலம் பி.எஸ்.கே. மற்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகிய மூன்று எழுத்தாளர்களுக்கும் ரூ.4 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்புக்கான ஆவணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களை எளிய தமிழில் மக்கள் பதிப்பாக மொழிபெயர்த்து மூன்றாம் கட்டமாக 73 தொகுதிகளை வெளியிட்டு, தமிழறிஞர்கள் வே.ஆனைமுத்து மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டது. அதன்படி, வே.ஆனைமுத்து நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு நேர்வாக அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களான அரி.தமிழ்ச்செல்வி, ஆ.பன்னீர்செல்வம், ஆ.வெற்றி, ஆ.வீரமணி, ஆ.அருள்மொழி, ஆ.கோவேந்தன் ஆகியோருக்கு நூலுரிமைத்தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

அதேபோன்று ஈரோடு தமிழன்பன் (ந.ஜெகதீசன்) நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு அவரின் வாழ்க்கை துணையான தி.பா.சாந்தகுமாரிக்கு நூலுரிமைத்தொகை 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Erode Tamilanban ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Erode ,Tamil Nadu Housing Board ,House ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!