சென்னை: உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், நீதிமன்ற நிர்வாக பணிகளை செம்மைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பணி ஓய்வு காலங்களை கருத்தில் கொண்டு புதிய நியமனங்கள் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக, தலைமை நீதிபதிகள் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன்பே அந்தந்த மாநில நீதிமன்றத்தின் நடைமுறைகளை தெரிந்து கொள்வதற்கான புதிய திட்டமிடல் முறையை அமல்படுத்தவும், சர்ச்சைக்குரிய கல்விசார் கருத்துகளை ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழு கடந்த வாரம் கூடியது.
அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதுபோன்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் மற்றும் ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அவர் இன்றோ அல்லது நாளையோ அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார் என்று தெரியவருகிறது.
