சென்னை: தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சில நேரங்களில் சாதி மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், பள்ளி மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு உணர்வுகள் தூண்டப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுபோன்ற கசப்பான நடவடிக்கைகளை முற்றிலும் தடை செய்வதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், அரசிதழில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2018 (தமிழ்நாடு சட்டம் 35/2019) பிரிவு 57ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் தமிழ்நாட்டில் பின்வரும் திருத்தங்களையும் செய்துள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன்பின்னரோ எந்தவொரு நிகழ்ச்சியோ, கூட்டமோ, பிரசாரம் மற்றும் அறிவுரைகள் வழங்கலோ, அல்லது எந்தவொரு வெளிநபரோ, சங்கமோ அல்லது அமைப்பின் எந்த ஒரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்யவும் அல்லது நடத்தவும் கூடாது குறிப்பாக, அரசியல் அல்லது கருத்தியல், வகுப்புகுவாத அல்லது பிரிவினை வாதம்,
அல்லது பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பு இல்லாதவை, கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள், அல்லது இதுபோன்ற செயல்பாடுகளில் அவை மதச்சார்பற்றயாகவும், அரசியல்சாராதவையாகவும் இருப்பதுடன் கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே் அனுமதிக்கப்படும். மேலும், அரசால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரி அல்லது வேறு எந்த அதிகாரத்தின் முன் அனுமதியோ பெற வேண்டும்.
இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாத, சமூகம், மொழி அல்லது சிந்தாந்த அடிப்படையில் மாணவர்கள் இடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்புஅல்லது வெறுப்பை ஊக்குவிக்கும், நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிப்பதாக இருக்கும். எனவே இவற்றை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
