தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 101 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் தொடரும் வறண்ட வானிலை காரணமாக 4 மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, வறண்ட வானிலை மேலும் நீடிக்கும் என்று சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அனேக இடங்களில் இயல்பைவிடவும் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. திருத்தணி, மதுரை, சென்னை பகுதிகளில் 100 டிகிரி வெயில் நிலவியது. பிற பகுதிகளில் இயல்லை ஒட்டியும் ஒரு சில இடங்களில் 98 டிகிரியாகவும் இருந்தது. வெப்பநிலையை பொருத்தவரையில் திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது.

இதற்கிடையே, தெற்கு உள் கர்நாடகா முதல் தெலங்கானா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

8ம் தேதி, நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும், 9ம் தேதி மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்பும், 10ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.

Related Stories: