மனச்சிதைவு நோயின் பரவலும் உளவியல் சிகிச்சை முறைகளும்

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

உளவியல் மருத்துவர்களாலும்,நிபுணர்களாலும் கையாள மிக கடினமான தீவிரம் கொண்டதென வரையறுக்கப்படும் மனச்சிதைவு (Scizhophernia) உளநோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. 2021 – ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி உலக அளவில் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 23.6 மில்லியன் ஆவார்.

மேலும், அந்த ஓராண்டில் புதிதாக இணைந்த மனச்சிதைவு நோயாளிகளின் எண்ணிக்கை 1.22 மில்லியன் என்றும் கணக்கீடு சொல்கிறது. இதுவே கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்சமான மனச்சிதைவு பாதிப்பு விகிதம் என்ற விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

ஆஸ்திரேலியா, கிழக்கு ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் மனச்சிதைவு நோயின் பரவல் கடந்த பத்தாண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது என்ற உண்மை, நாம் மாற்றுக் கோணத்தில் மனநோய்களை அணுக வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகும்.தேசிய மனநலச்சங்கம் NMHS 2015-2016 கணக்கெடுப்பின்படி தேசிய அளவில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் அதிகபட்சமான மனச்சிதைவு நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

கேரளாவின் பாதிப்பு விகிதம் 11.36% ஆக உள்ளது. எனவே, கல்வி அறிவில் சிறந்த மாநிலம் என்று நாம் போற்றும் மாநிலத்தின் இந்த மனநல விவரம் வெறும் கல்வி மட்டுமே எல்லாவற்றையும் தந்துவிட முடியாது என்பதை உணர்த்துகிறது இல்லையா? எனவேதான் பண்டைய காலத்தில் IQ எனப்படும் கற்றல் மற்றும் தர்க்கறிவுத் திறன் குறித்து அதிகம் பேசிக்கொண்டிருந்த உளவியல் துறை தற்காலத்தில் EQ எனப்படும் உணர்திறன் மேம்பாடு குறித்து அதிகம் பேசுகிறது.

ஏனெனில், அதீதமான அறிவுத் தேடல் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை பல நேரங்களில் ஏற்படுத்தி விடுகிறது. அது பிறரிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் ஒதுங்க வைத்து விடுகிறது. பிறர் தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற சுய அகந்தையின் பிடிவாதமும், அவ்வாறு நடக்காவிட்டால் ஏற்படும் மிகை கோபமும் வன்மமாக மனதில் படிகிறது. அதுவே மெல்ல மெல்ல புற்றுநோயைப் போல் மூளையினை ஆக்ரமித்து மனச்சிதைவு நோயின் காரணிகளை விரைவாக தூண்டிவிடுகிறது. ஏற்கனவே மரபியல் காரணிகளின் தாக்கமும் உள்ளே புதைந்திருக்கும்போது இத் தகைய வாழ்க்கை முறை மனச்சிதைவுக் காரணிகளை வலுவாக்கி அறிவாளியை மனநோயாளியாக்கிவிடும்.

குறிப்பிட்ட மக்களை இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம். சிறுவயது முதலே நிறைய கேரளக் குடும்பங்களோடும், நண்பர்களோடும் நான் பழகியதுண்டு. அப்பொழுதெல்லாம் Sarcastic நகைச்சுவையாகப் பகிரப்படும் ஒரு சொலவடை “நீங்கள்டே வீட்டில் ஆராணு ப்றாந்து” என்பதே. அதாவது அங்கே வீட்டிற்கு ஒரு மனச்சிதைவு நோயாளி நிச்சயம் இருப்பார் என்ற பொருளில், உங்கள் வீட்டில் யார் பைத்தியம் என்று நலம் விசாரிப்பது போல் கேட்பதாகும்.

அந்த அளவிற்கு மனச்சிதைவு நோயின் பரவல் அங்கே காலம் காலமாக இருக்கிறது. மனநல மருத்துவமனைகளும், தீவிர உளநோய் ஆராய்ச்சி மையங்களும், சேவை அமைப்புகளும் கேரளாவில் அதிக அளவில் இருப்பது ஏன் என்று இப்போது புரிகிறது இல்லையா ?கேரளாவிற்கு அடுத்தபடியாக தெலுங்கானா, மணிப்பூர், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் Anxiety disorders, Depression போன்ற தீவிர நிலையை அடையாத மனக்கோளாறுகள் அதிகம் இருக்கின்றன.

மிகத் தொன்மையான கலாச்சாரத்திலிருந்து திடீரென்று அதிநவீனநகர்மய வாழ்விற்கு மாறுவது, புகை, மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்பாடு, அதிக எதிர்பார்ப்புகள் – உயர் அந்தஸ்து முனைப்பு ( Demand, High status standards), மிகக் கூர்மையான வாழ்க்கைத் திட்டமிடல், சுமையாகும் திட்டங்கள் (Overloaded plans ) போன்றவை தரும் மன அழுத்தமே வெகு விரைவில் மனச்சிதைவுநோய் அங்கே தீவிரமடையக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படி அச்சப்படுத்திக்கொண்டே யிருந்தால் எப்படி? தீர்வே இல்லையா என்றால் தீர்வு கடினமே. உச்சநிலையை அடைந்த மனச்சிதைவு நோயாளிகளின் பிழைப்பு விகிதம் நாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.Scizophernia முழு முன்னேற்ற விகிதம் 20% மட்டுமேயாகும். பொருத்தமான உள்மருந்துகளோடு, முறையான உளவியல் சிகிச்சைகளையும் சேர்த்து கூட்டு மருத்துவமாக எடுத்துக் கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக இருக்கும். இம்முறையில் 20% முதல் 50% சதவீதம் பேர் ஓரளவு முன்னேற்றம் அடைகிறார்கள் என்பது சற்றேஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் உண்மை. ஆகவே ஆரம்ப நிலைகளிலேயே கண்டறிவது ஒன்றுதான் இதற்கு வழி.மனச்சிதைவு நோயானது Scizoid என்றும் Scizotypal என்றும் இருவேறு தன்மைகளோடு இருக்கக்கூடும்.

Scizoid என்பது நடைமுறையில் உறவுகளிலிருந்தும், சமூகத்திடம் இருந்தும் முற்றிலும் (Break from relatilty) விலகல் ஏற்பட்ட தன்மையோடு இருக்கும். Scizotypal என்பது வித்யாசமான எண்ணங்கள், தலைகீழான அல்லது தவறான நம்பிக்கைகள், தொடர்புமொழிச் சிக்கல்களோடு இருக்கும். இவ்விரு தன்மைகளில் எதன் தாக்கம் அதிகமென்று பரிசோதித்த பின்னரே உரிய உளவியல் சிகிச்சைகளைத் தீர்மானித்து தொடங்க வேண்டும்.

தொடர்புமொழிச் சிக்கல்களில் Palilaika, Echolaila என்ற இரு வேறு தன்மைகள் இருக்கக்கூடும். ‘Palilaika ‘ என்பது தான் பேசுவதையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருப்பதாகும். ‘Echolaila’ என்பது அடுத்தவர் கூறியதைக் கேட்டு அதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பது. இந்த அறிகுறிகள் மனச்சிதைவு நோயை உறுதிப்படுத்தும் என்றாலும் Autism குறைபாடு கொண்டவர்களுக்கும் இதே அறிகுறிகள் காணப்படலாம். எனவே, குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படக்கூடிய ஆட்டிஸம் அறிகுறிகள் இருந்தனவா என்பதை குடும்ப நபர்களோடு கலந்து பேசி அறிவது அவசியம். இல்லையெனில், தவறான முடிவெடுத்து தவறான சிகிச்சை அளிக்க நேரிடும்.

Scizophernia பாதிப்புகொண்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் அதிக அளவிலான உடல் சக்தி ( High Physical Energy ) இருக்கக்கூடும். எனவே, சிகிச்சை முறைகளில் முதலில் உடல் சக்தியினை கட்டுப்படுத்தும் ( Energy Cut-Off activities) செயல்முறைப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும். மனச்தைவு நோய்க்கான உளவியல் சிகிச்சைகளான Cognetive Behavioural Therphy , Family therphy, Social Rehabilation, ஆகியவற்றை கூடுதலாக Assertive Community Treatment அளிப்பது கூடுதலான பலன்களைத் தரும். இந்த ACT முறை நம்முடைய வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் சொல்வதுபோல் மனநோயாளிகளை பொருளைப் போல் பார்க்காமல் அக்கறையோடு கருணையாகப் பார்க்கும் தன்மை கொண்டது எனலாம். நல்ல அனுபவமிக்க, மனிதாபிமானம் கொண்ட மனநல ஆலோசர்களால் மட்டுமே வழங்க முடிகின்ற சிகிச்சை இது.

இம்முறையில் பித்துநோய்க்கு Life coaching என்ற விரிவான நோக்கில் சிகிச்சை அளிக்க வேண்டும். Acceptance level Re-Arrangement, Regulating Emotions, Stay in Present, Committment to Values, Realization of Respinsibilities என்று படிப்படியாக நுட்பமான கூறுகளில் கவனம் செலுத்தி சுய விழிப்புணர்வு (‘Self Awareness) நிலைக்கு கொண்டு வரவேண்டும். ஆனால், இவையெல்லாம் ஒருநாள் மாயம் கிடையாது. ‘எறும்பு ஊர கல் தேயும் ‘ என்பதைப்போல் மெதுவாகத்தான் மாற்றங்கள் நடக்கும். அதற்கு பாதிப்பு கொண்டவரின் குடும்ப உறுப்பினர்களின் நிதானமும், முழு ஒத்துழைப்பும் தேவையாகிறது.

தொகுப்பு: மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

Related Stories: