உணவும் குணமும்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றையஅவசர யுகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் காலையில் சமைக்கும் உணவை டப்பாவில் அடைத்து வைத்து மதியம்தான் சாப்பிடும் நிலை இருக்கிறது. ஆனால், எந்த உணவாக இருந்தாலும் சமைத்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும் என்கிறது ஆய்வுகள்.அந்த காலத்தில் ஃபிரிட்ஜ் போன்ற நவீன வசதிகள் கொண்ட கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இப்போது அப்படியில்லை. இன்றைய நவீன உலகில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத அத்தியவசிய பொருட்களாகிவிட்டது அதனால், அந்தக்காலத்து முறையை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் இருக்கிற பலர் ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு தயாரித்த உணவுகளை ஃபிரீசரில் பதப்படுத்தி வைத்துக் கொண்டு தேவைப்படும் போது எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு எடுத்து, மைக்ரோஓவனில் சூடு பண்ணி சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால், நவீன சமையல் சாதனங்கள், அதாவது சமீபத்திய மைக்ரோஓவன் என்னும் மின்சார அடுப்புகள் வரை புழக்கத்தில் வந்துவிட்டாலும் இயற்கையை நூறு சதவிகிதம் காப்பாற்ற முடியாதுஎன்பது தான் நிதர்சனம் ஒருமுறை சமைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிட்ட பிறகு, அந்த உணவை மீண்டும் சூடு பண்ணினால் அதில் இருக்கும் இயற்கையான ஆரோக்கியம் நிச்சயமாக இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆண்களும் பெண்களும் வேலை க்குப் போகவேண்டிய சூழல் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் அந்தச் சூழலுக்கு ஏற்ப நாம் உணவு முறையை மாற்றிக்கொண்டோமே தவிர உண்மையான இயற்கை உணவைச் சாப்பிடுபவர்களுக்கு கிடைக்கிற ஆரோக்கியம், ஃப்ரிட்ஜ், ஃபிரீசரில் வைத்து சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காது.

அந்த வகையில், பகவத்கீதை என்னென்ன மாதிரி உணவுகள் நம்மைப் பாதிக்கின்றன. எந்தமாதிரியான உணவு உண்பவரின் குணம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அழகாக எடுத்துச் சொல்கிறது. அதாவது, தாமசம், ராஜசம் சத்துவம் என்னும் மூன்று வகையான குணங்களைக் கொண்டவர்கள் உணவு விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும், ஒரு யாமம் கழிந்த உணவைத் தின்னாதே என்றும் சொல்கிறது.

தாமசம் குணத்தைக் கொண்டவர்கள், பழைய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள், அதில் சிலர், சாம்பாரை ரசித்துச் சாப்பிடுவார்கள். அதை கொதிக்கவைத்து, கொதிக்க வைத்து, இதற்கு சுண்டக்குழம்பு என்று பெயரிட்டு பழைய சாதத்துக்கு தொட்டுக் கொள்வார்கள். அப்போது அந்த சாம்பாரின் வடிவம் மாறி கெட்டியாகி விட்டிருக்கும்.

ஆனால், இதுபோன்ற பழையது என்கிற பெயரில் சில நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட, புளித்துப்போன ஒரு விஷயத்தைச் சாப்பிடுவது என்பதெல்லாம், தாமச குணவான்களுக்குக் கைவந்த கலை. தமோ குணம் ஒருவித மந்தத் தன்மையை, சோம்பலை நமக்குள் கண்டிப்பாக ஏற்படுத்தும். இதுபோன்ற உணவுகளை விரத நாட்களில் மட்டும் தவிர்க்காமல், எல்லா நாட்களிலும் தவிர்க்க வேண்டும்.

ராஜச உணவு என்பது, அதீதமான காரத்தை அதீதமான புளிப்பை, அதீதமான சூட்டில் சாப்பிடுவது. சிலபேர் அடுப்பிலிருந்து எடுத்துவிட்டாலே ஆறிப் போய்விட்டது என்று சொல்வார்கள். அந்த அளவுக்குச் சுடசுடச் சாப்பிட்டால்தான் சில பேருக்கு சாப்பிட்ட மாதிரியே இருக்கும். உடலின் ஆரோக்கியத்துக்கு பயங்கரமான பகைவர்கள் யார் என்றால், புளிப்பு, காரம், வெப்பம் ஆகியவைதான். ஆனால், இந்தப் பகைவர்களை ஆரத்த தழுவி தாமே வரவேற்பதுதான் ராஜச குணமாகும்.

உதாரணமாக, சிலர் காபியை கொதிக்க கொதிக்க குடிப்பார்கள். அந்த காபி தம்ளரை கையால் பிடிக்கக் கூட முடியாமல் இருக்கும். இப்படி கையினாலேயே தாங்க முடியாத அளவு சூட்டினை குடலுக்குள் ஊற்றினால், அந்தக் குடலின் கதி என்னவாகும். இதைப்பற்றியெல்லாம் இவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுதான் ராஜச குணவான்களின் உணவுப்பழக்கம். சத்துவகுண உணவு என்பது, சாத்விகமானது. வெள்ளையான அன்னம், வெள்ளையான பால், மோர் இதுபோன்ற விஷயங்களைத்தான் அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதாவது, அவர்களுடைய உணவுப்பழக்கம் மிகவும் எளிமையானது.அங்கே காரம், புளிப்பு போன்ற சுவைகளுக்கு இடமே இல்லை.

அந்த வகையில், இனிப்பை அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். காரத்தை மிகுதியாகச் சாப்பிடுகிறவர்கள் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். புளிப்பை ரசித்துச் சாப்பிடுபவர்கள் மந்தமாக இருப்பார்கள் எனவே உணவுக்கும் குணத்துக்கும் சம்பந்தம் உண்டு என்பதை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உணவருந்த வேண்டும்.

Related Stories: