காபியில் சிக்கரி… பயன் என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

காபியில் சிக்கரி கலந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள். காபியில் வலி நிவாரணி கேஃபின் இருப்பதைப் போல, காபியில் சிக்கரி சேர்த்தால் நன்மைகள் ஏதேனும் உள்ளதா அல்லது பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பதை ஆயுர்வேத நூல்கள் விளக்குகிறது. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

Cichorium intybus எனும் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கரியைத்தான் நாம் காபிப் பொடியுடன் கலந்து பயன்படுத்துகிறோம். நல்ல மணம் தரும் சிக்கரி கலந்த காபியைக் குடிப்பதற்கு ஆனந்தமாக இருந்தாலும் சிக்கிரி சிலருக்குத் தலைசுற்றல், வயிறு அப்சட் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆயுர்வேத முறையில் இதற்கான காரணமாக என்ன கூறப்படுகிறது என்றால், சிக்கரி காபி வயிற்றில் வந்தடைந்தவுடன், அங்குள்ள பாசகம் எனும் பித்தத்தின் குணங்களாகிய ஊடுருவும் தன்மை, சூடு ஆகியவற்றைத் தூண்டி, அந்த குணங்களை, ரத்தநாளங்களின் வழியாக உடனடியாக மூளைக்குஎடுத்துச் சென்று, அங்குள்ள தர்ப்பகம் எனும் கபத்தின் குணங்களாகிய மந்தம் மற்றும் குளிர்ச்சியைக் கிளறிவிட்டு உருக்குவதால், மனதின் ஒரு தோஷமாகிய ரஜஸ் கிளர்ந்தெழப்பட்டு, சுதந்திரமாக வலம் வரத் துவங்குகிறது.

மூளையின் நரம்புகளிலுள்ள பிராண வாயுவினுடன் இது கைகோர்த்துக்கொள்வதால், இந்தச் சுழற்சியின் விளைவால், மயக்கம் போன்ற ஒரு கிறுகிறுப்பை அது ஏற்படுத்துகிறது.இப்படி ரஜ-பித்த-வாயுவின் விஷமமான ஒரு நிலையை ஏற்படுத்தும் சிக்கரி காபியின் மீதுள்ள மோகத்தைத் தவிர்ப்பதே நலம் என்று கூறுகிறது.

ஆனால் மிகவும் மந்தமான, சுறுசுறுப்பற்ற, சோம்பேறித்தனமாக உள்ளவர்களுக்கு இதுபோன்ற கிளர்ச்சியூட்டும் பானங் களால், அவர்களுடைய உடல்-மனநிலையில் சிக்கரி கலந்த சூடான காபி, நல்ல மாற்றங்களைத் தற்காலிகமாக ஏற்படுத்தித் தருகிறது. அதனால் சிக்கிரி கலந்த காபியை சாப்பிட்டவுடன் அவர்கள் சுறுசுறுப்பாகி விடுகிறார்கள். ஆனால் அதுவே நிரந்தரமாக மாற்றித் தருமா? என்றால், மாற்றித் தராது என்றே கூறலாம்.

காபிப்பொடியிலுள்ள கேஃபின் எனும் வேதிப்பொருள், மூளை நரம்புகளுக்கு ஒரு க்ரியா ஊக்கியாக இருப்பதாலும், அதன் நறுமணம் மற்றும் சுவை, மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களை வைத்து ஆலோசித்துப் பார்த்தால், பித்தம் எனும் தோஷத்தின் ஆதிக்கத்தை உடலில் அதிகம் கொண்டவர்களுக்கு, சிக்கரி காபியும், காபியும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று தெளிவாகிறது. மற்றவர்கள் காபியை சிக்கரி சேர்த்து அருந்துவதால், அதிகம் பாதிக்கப்படுவதில்லை அதனால் அவரவர் உடல் தன்மைக்கேற்ப சிக்கிரியை சேர்க்கலாமா வேண்டாமாஎன்று யோசித்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: