சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தவாக, கொமதேக, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
ஓரிரு நாளில் அவர்களுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய குழுவினர் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: இந்த தேர்தலில் வலது சாரி கட்சிகளை காலூன்ற கூடாது என்ற பொறுப்புணர்வுடன், மதசார்பற்ற கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்ற அக்கறையோடு, இந்த கூட்டணியில் ஒரு விசிக ஒரு அங்கம் என்ற உரிமை உணர்வுடன் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இல்லை. எங்கள் கருத்துகளை திமுக தரப்பில் கேட்டுக்கொண்டார்கள். எத்தனை தொகுதிகள் என்று எல்லாம் பேசவில்லை. எங்கள் அதிகார பகிர்வு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறோம். பாண்டிச்சேரியில் பொது தொகுதி, தனி தொகுதி வேண்டும் என்று 3 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, சமத்துவ மக்கள் கழகம் கட்சியுடன் திமுக குழுவினர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். பின்னர் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அளித்த பேட்டி:2019ல் நடந்த மக்களவை தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக எங்களை திமுக குழு அழைத்தது. எங்கள் கருத்தை கேட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னர் எங்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவாக கூறியிருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் களப்பணியாற்றி கொண்டிருக்கிறோம். மேலும் அவர்கள் தரும் தொகுதியில் நிற்கவும் தயாராக இருக்கிறோம். 2 தொகுதிகளை கேட்டு இருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திமுக குழு மக்கள் விடுதலை கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் முருகவேல் ராஜன் அளித்த பேட்டியில், ‘‘2019 மக்களவை தேர்தல் தொடங்கி இன்று வரை திமுக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டோம். அதேபோல, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விடுதலை கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டையில் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்’’ என்றார்.
* மோடி வித்தை எடுபடாது
‘‘தமிழகத்தில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்ன என்ன பேசினாலும் திமுகவிற்கு களங்கம் பூச நினைத்தாலும் அது எடுபடாது. தமிழ்நாடு வேறு, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் வேறு. இந்த தேர்தலிலும் தமிழக மக்கள் மீண்டும் அதனை பாஜவுக்கு உணர்த்துவார்கள். இங்கு மதவாத அரசியலுக்கு இடம் இல்லை. சாதியவாதி அரசியலுக்கு இடம் இல்லை. வெறுப்பு அரசியலை பரப்ப மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த தேவை இருக்கிறது. மதவாத சக்திகளால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் விசிகவிற்கும் பொறுப்பு உள்ளது’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.
